November 22, 2024

நாடு வங்குரோத்து:ஹர்ஷ டி சில்வா !

நாட்டில் வங்கிமுறை சரிந்தால் நாடு வங்குரோத்து நிலையை அடையும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர், நாடு ஆபத்தில் உள்ளது. மக்களை கேள்விக்குள்ளாக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை கடுமையாக வலியுறுத்துகின்றோம்.

எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் வங்கிமுறை சரிந்து பொருளாதாரம் வீழ்ச்சிடையும் என்று மத்திய வங்கி தனக்கு அறிவித்ததாக மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வங்கிமுறை சரிந்துவிடும் என்று எந்த அமைச்சரும் இதற்கு முன்பு கூறவில்லை. இது பாரிய ஆபத்தாகும்.

அமைச்சரவையின் வழிமுறை எமக்கு நன்கு தெரியும். வங்கிமுறை சரிந்தால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததற்குச் சமன்.

நாட்டில் டொலர்கள் கையிருப்பில் இல்லை. மே மாதத்தின் கையிருப்பு 4,018 மில்லியன் டொலர்கள் என்று நினைக்கிறேன். அதில் தங்க நகைகளுக்கான கையிருப்பை நீக்கினால் 3,530 மில்லியன் டொலர்களே இருப்பில் உள்ளன.

அறிக்கையின்படி, அடுத்த 12 மாதங்களுக்கான இருப்புத் தேவை 8,000 மில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளது.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை குற்றம்சாட்டுகிறது, இப்போது 700 மில்லியன் டொலர் பெற காத்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மில்லியன் யுவான் மட்டுமே வந்ததாக பொய்யுரைக்கின்றனர். கடன்களை அடைக்க இதைப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் அது டொலர்களில் இல்லை.

இரண்டு நிறுவனங்கள் மட்டும் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கடனைக் கொண்டுள்ளன. நைஜீரியாவிடம் கடன் வாங்க நம் நாடு தள்ளப்பட்டுள்ளது,

ஒரு கறுப்புப் பணமோசடி கொண்ட நாட்டை உருவாக்குவதற்காக 69 இலட்சம் வாக்குகளை மக்கள் அளிக்கவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.