November 25, 2024

இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள பகிரங்க தகவல்கள்

கொழும்பு துறைமுக நகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகுமா என்ற கோணத்தில் அவதானித்து வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள பின்னணியில், சீனாவின் காலனியாக இலங்கை மாறிக் கொண்டிருப்பதாக தமிழகத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் பலத்த எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் இந்திய அரசாங்கம் மௌனம் காத்துக் கொண்டிருந்தது. இது தொடர்பில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தே இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்அரிந்தம் பக்ஷி,

கொழும்பு துறைமுக நகரத்துடனான சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து இலங்கை தனது இருதரப்பு ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, கடல்சார் பாதுகாப்பை உள்ளடக்கிய பகிரப்பட்ட பரஸ்பர இருதரப்பு சிறப்பு ஒத்துழைப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தநிலைியில், இந்தியாவின் பாதுகாப்பை கருதி துறைமுக நகரின் நகர்வுகள் குறித்து அவதானித்து வருகின்றோம். குறிப்பாக துறைமுக நகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகுமா என்ற கோணத்தில் அவதானிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்துப் பேசிய போது சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்திருந்தனர்.

இதற்குப் பதில் வழங்கிய அவர், இந்த விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்று தமக்குத் தெரியும் என்று பதில் வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.