ஏரிக்கரைப் பேச்சு ஏற்றந் தருமா ? அருந்தவராஜா, க
இரு பெரும் வல்லரசுகளின் தலைவர்கள் ஜெனீவா நகரில் உள்ள இயற்கை அழகு நிறைந்த ஏரிக்கரைப் பூங்காவில் (Parc La Grange) இன்று சந்தித்துக் கொள்கிறார்கள். அமெரிக்கத் தலைவர் ஜோ பைடன் ( Joe biden ) மற்றும் றசியத் தலைவர் புட்டின் (Putin) ஆகிய இருவரும் பேச்சு நிகழும் இடத்துக்கு வரும் வழியில் நீண்ட அழகிய ஏரிக்கரையைக் கடந்தும் பின்னர் பசும்புல்வெளியுடன் கூடிய பூந்தோட்டங்களையும் கடந்து செல்ல வேண்டும்.
இந்தப் பசுமை , குளிர்மை , இயற்கை எழில் என்பன கொதிநிலை உரையாடலை தவிர்த்து குளிர்மையான முடிவுகளை எட்டுவதற்கான புறச் சூழலை தோற்றுவிக்குமென சுவிற்சர்லாந்து நம்பிக்கை கொண்டுள்ளது . போரைக் கொழுத்தும் ஆயுதங்கள் இந்த அழகிய பிரபஞ்சத்தை அழித்துவிடும் என்பதை இந்தத் தலைவர்கள் ஜெனீவா ஏரிக்கரை அழகியலைப் பார்த்துவிட்டு மனம் மாறுவார்களா ?
உலக யுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆனால் போரால் சாதிக்க முடியாத பல ஊடுருவல்களை மெளனமாக பல நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. இதனைப் புரிந்து கொள்ள முடியாத தலைவர்கள் உள்ள நாடுகள் தடம் மாறி படுகுழியில் வீழ்கின்றன. இன்றைய பேச்சுக்கள் கூடுதலாக மெளன யுத்தம் பற்றியதாகவே இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது .
அமைதியான சூழலில் ஆற அமர இருந்து சிந்தியுங்கள் , பேசுங்கள் பிரச்சினைகள் அந்த இடத்திலேயே தீர்ந்து போகும். ஆயுதம் எதற்கு …?
*
அருந்தவராஜா, க
ஜெனீவா