மூளைக்குள் பந்து வடிவில் இருந்த கருப்பு பூஞ்சை- டாக்டர்கள் அகற்றினர்!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைவர்களுக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்படுவது கண்டறிப்பட்டுள்ளது.
இதில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் கருப்பு பூஞ்சை இன்னொரு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் இதுவரை 31,216 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,109 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் தான் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் முதியவர் ஒருவரின் மூளையில் இருந்து கிரிக்கெட் பந்து வடிவிலான கருப்பு பூஞ்சையை பாட்னா டாக்டர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு
பீகார் மாநிலம் ஜமுவை சேர்ந்தவர் அனில்குமார். 60 வயதான இவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணம் அடைந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு அடிக்கடி தலை சுற்றல் மற்றும் மயக்கம் இருந்தது.
இதனால் அவதிப்பட்டு வந்த அவர் பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
அவரது மூளையில் கருப்பு பூஞ்சை இருந்தது தெரியவந்தது. இது மூக்கு வழியாக மூளைக்குள் நுழைந்தது. ஆனால் அவரது கண்களுக்கு பரவவில்லை.
இதைத்தொடர்ந்து அவரது மூளையில் இருந்த கிரிக்கெட் பந்து வடிவிலான கருப்பு பூஞ்சையை டாக்டர்கள் அகற்றினார்கள். அறுவை சிகிச்சை மூலம் 3 மணி நேரத்தில் இதை அகற்றி சாதனை படைத்தனர்.
பீகாரில் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனாவால் 7.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9466 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 7 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.