யாழ். நூலக எரிப்பு மாதத்தில் தெற்கை நெரிக்கும் அகமும் புறமும்! பனங்காட்டான்
கொழும்புக் கடலுக்குள் மர்மக் கப்பல் தீப்பற்றி நாசமானது, கட்டுநாயக்காவில் விமானத்தில் இறங்கியவர்கள் மாயம், அமெரிக்க காங்கிரஸின் முன்மொழிவு, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தீர்மானம், கோதபாயவை கதிரையில் ஏற்றிய பௌத்த பிக்குகள் அவருக்கு எதிராக தூக்கும் போர்க்கம்பம் என்பவை யாழ். நூலக எரிப்பின் நாற்பதாவது ஆண்டில் தெற்கின் கழுத்தை நெரிக்கும் அம்புகள். ஆசிய பெருங்கண்டத்தின் மிகப்பெரிய நூலகமாகத் திகழும் யாழ்ப்பாணப் பொதுநூலகத்தை, சிங்கள அரச பேரினவாதம் திட்டமிட்டு தீ மூட்டி எரித்து சாம்பராக்கிய நாற்பதாவது ஆண்டு இந்த மாதம் முதலாம் நாள் நினைவுகூரப்பட்டது.
அதேசமயம் எப்போது தீ மூட்டப்பட்டது என்ற பட்டிமன்றமும் உலகளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தீ மூட்டியவர்கள் யார், அதன் பின்னணி என்ன, எவ்வாறு இடம்பெற்றது என்ற வரலாறு அணைந்து போகாது மீளமீள நினைவூட்ட வேண்டிய தமிழ் ஊடகங்களும், சில கட்டுரையாளர்களும், நூலகம் எரிக்கப்பட்ட நாற்பது ஆண்டுகளுக்குள்ளேயே அதன் உண்மைத்துவத்தையும் வரலாற்றையும் மாற்றவும் திரிபுபடுத்தவும் முனைவதைப் பார்க்கும்போது இதுவும்கூட ஒரு தீ வைப்பாகவே தெரிகிறது.
1981 யூன் மாதம் முதலாம் திகதி இரவு பத்து மணியளவில் நூலகம் எரிக்கப்பட்டது. களத்தில் நின்று எரிப்பதற்கு திட்டமிட்டு செயற்படுத்தியவர்கள் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் இனவாத அரசில் அங்கம் வகித்த சிங்கள பௌத்த அமைச்சர்களான சிறில் மத்தியு, காமினி திசநாயக்க ஆகியோர்.
இந்தக் கைங்கரியத்தைச் செய்யவென கொழும்பிலிருந்து அன்று காலை விமானத்தில் இறக்கப்பட்டவர் பிரதி பொலிஸ்மா அதிபராகவிருந்த எட்வேர்ட் குணவர்த்தன. இவர்களுக்கு நிகராக இச்சம்பவம் அனைத்தினதும் நிகழ்கால கண்கண்ட சாட்சியாக இருப்பவர் சீ.வி.கே.சிவஞானம்.
நூலகம் எரிக்கப்பட்டபோது யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளராக இருந்தவர் இவர். நூலகம் மீள நிர்மாணிக்கப்பட்டு 1984 யூன் மாதம் 4ம் திகதி பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டபோதும் இவரே ஆணையாளராக இருந்தவர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகரசபை வெளியிட்ட நூலிலும், நூலக நிர்மாண கொழும்புக் குழுவின் தலைவராகவிருந்த பிரபல கட்டிடக் கலைஞர் வி.எஸ்.துரைராஜா வெளியிட்ட ஒளிப்படங்களுடனான ஆங்கில நூலிலும் யூன் முதலாம் திகதி என்பது அழுத்தம் திருத்தமாக பதியப்பட்டுள்ளது.
நூலக எரிப்பு சம்பந்தமாக நியமிக்கப்பட்ட லயனல் பெர்னாண்டோ ஆணைக்குழுவின் அறிக்கையிலும் பல இடங்களில் இத்திகதி யூன் முதலாம் திகதி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பின்னரும் எதற்காக பட்டிமன்றம்? ஏன் குழறுபடி? சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி என்பவற்றுக்கு இரண்டு பஞ்சாங்கங்கள், இரண்டு திகதிகளைக் குறிப்படுவதுபோல நூலக எரிப்புக்கும் இரண்டு திகதிகள் தேவையா?
நூலக எரிப்புத் திகதி திரிவுபடுத்தப்படுவதுபோல இலங்கையைத் தொற்றிப் பரவும் கொரோனாவும் பல திரிபுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்ததாக கொழும்புக் கடலில் மர்மக் கப்பலொன்று தீப்பற்றி எரிந்ததும், நிவாரணம் கொண்டு சென்ற அமெரிக்க விமானத்தில் பயணித்த சிலர் மாயமானதும், அமெரிக்க காங்கிரஸில் இலங்கை தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு ஐரோப்பிய ஒள்றிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானமும், தென்பகுதியிலுள்ள முக்கிய பௌத்த தலைமைப் பிக்குகள் கோதபாய ஆட்சிக்கு எதிராக செயற்பட ஆயத்தப்படுத்தும் ஏற்பாடுகளும் இப்போது சூடுபிடித்துள்ள விடயங்கள்.
கொரோனா ஒழிப்பை முள்ளிவாய்க்காலுடன் சமப்படுத்தி ராணுவத்திடம் கையளித்ததால் ஏற்பட்ட பலாபலனை நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உண்மையான புள்ளிவிபரத்தை அரச நிர்வாகம் மறைத்து வருவதால் தொற்றாளர், மரணமானோர் எண்ணிக்கை சரியாக வெளிவரவில்லை.
கொரோனாவின் பிறப்பிடமான சீனா தயாரித்த சினோபாம் தடுப்பூசிகளையே இங்கு பயன்படுத்துவது இலங்கையின் தலைவிதி. சினோபாம் சரணம் கச்சாமி என்ற பிரார்த்தனையுடன் சடலங்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் மாற்றாந்தாய் மனப்பான்மையில் தமிழர் தாயகம் நடத்தப்படுகிறது.
கொழும்புக்கு அருகாமையில் நச்சுக் கலன்களுடன் எரிந்து கடலுக்குள் அமிழ்ந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மர்மம் தொடர்கதையாகிறது. கடந்த செப்டம்பரில் கொழும்புக்குத் தெற்காக பனாமா கொடியுடன் காணப்பட்ட கப்பலும் இப்படித்தான் எரிந்து மறைந்தது.
மூன்று நாடுகள் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எவ்வாறு கொழும்பு வந்தது, அதில் வந்த நாசகார பொருட்கள் யாருக்கு வந்தன என்பது எப்போதுமே வெளிச்சத்துக்கு வராது.
கொரோனா தடுப்புக்கென யு.எஸ்.எய்ட் நிவாரணப் பொருட்களுடன் கட்டுநாயக்கா விரைந்த அமெரிக்க விசேட விமானம் பொருட்களை இறக்கிவிட்டு திரும்பிவிட்டது. ஆனால் அதில் சென்ற அமெரிக்கர்களில் நால்வர் திரும்பிச் செல்லாது அமெரிக்க தூதரகத்துக்குள் நுழைந்த சம்பவம் கோதபாய அரசுக்குத் தலையிடியைக் கொடுத்துள்ளது.
கடந்தாண்டு மியன்மாருக்கும் இப்படி சில அமெரிக்கர்கள் சென்று காணாமல்போன பின்னரே அங்கு புரட்சி ஏற்பட்டதை எதிர்க்கட்சி அரசியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு சாத்தியம் உண்டா என்ற ஊடகர்களின் கேள்விக்கு, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா பதில் கூற மறுத்துவிட்டார்.
அதேவேளை, அமெரிக்க காங்கிரஸ் முன்னால் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மறுவடிவம். இது இலங்கை அரசை நிலைகுலைய வைத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவர் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளைச் சந்தித்து அந்தப் பிரேரணையை நிராகரிக்குமihறு கெஞ்சியுள்ளார்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் அதே வேண்டுகோளை விடுத்துள்ளார். தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும் அல்லது சில பகுதிகளை நீக்க வேண்டுமென அமைச்சர் கேட்டுள்ளார்.
இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழரின் பூர்வீக நிலம் என்பதையே நீக்க வேண்டுமென்பது இதன் அர்த்தம். இதனை செய்யத் தவறி பிரேரணை நிறைவேற்றப்படுமானால் விடுதலைப் புலிகளின் போராட்டம் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படலாமென்ற அச்சமே இலங்கையை வாட்டுகிறது. இலங்கையை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்பதற்காகவே இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா கையிலெடுத்துள்ளது. இதன் எதிரொலியை செப்டம்பரில் ஜெனிவாவில் காணலாம்.
அமெரிக்கா பாயவிடும் அம்புக்கு இணைவாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் திடுதிப்பென ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் அமலில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென இத்தீர்மானம் வலியுறுத்துகிறது. ஜே.ஆர்.ஜெயவர்த்;தன ஜனாதிபதியாக இருந்தபோது தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட இச்சட்டம், கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக மாறிமாறி வந்த அத்தனை அரசாங்கங்களாலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தை பயன்படுத்தியே தமிழர்களை கைது செய்து சட்டத்துக்குப் புறம்பாக தடுத்து வைக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 628 வாக்குகள் கிடைத்தன. எதிராக 15 வாக்குகள் மட்டுமே. 40 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென்ற நிபந்தனையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலேயே 2017ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி முதல் ஜி.எஸ்.பி. சலுகை மீள வழங்கப்பட்டதை இந்தத் தீர்மானம் இலங்கைக்கு நினைவுபடுத்தியுள்ளது.
இதன் தொடராக பிரித்தானிய, கனடா நாடுகள் எடுக்கப்போகும் நிலைப்பாட்டை அறிய அந்நாடுகளில் வசிக்கும் புகலிடத் தமிழர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெனிவாவின் அடுத்த அமர்வில் மனித உரிமை ஆணையாளர் பச்சிலற் அம்மையாரின் மேற்பார்வை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போது பல விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அகமும் புறமும் இவ்வாறு சிலவற்றைக் காணும் வேளையில், கோதபாய – மகிந்த சகோதரர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த பௌத்த தலைமைப் பிக்குகள் அவர்களுடன் முரண்பட்டு, தமக்குள் கூடி ஆயத்தப்படுத்தும் எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் கசிய ஆரம்பித்துள்ளது.
நாரஹன்பிட்டியிலுள்ள அபயராம விகாரையும் இதன் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்ததேரருமே ராஜபக்சக்களின் வெற்றியின் மூலம். ராஜபக்சக்களின் பொதுபலசேன அரசியல் கட்சியின் உருவாக்கம், வேட்பாளர்கள் நியமனம், தேர்தல் வெற்றி அனைத்திலும் இந்த விகாரையே தலைமை அலுவலகமாக இயங்கியது. ஓரளவுக்கு ராஜபக்சக்களின் ஆதரவு ஆலோசகராகவும் ஆனந்ததேரரே விளங்கினார்.
கடந்த சில மாதங்களில் கோதபாயவின் போக்கினால் விரக்தியும் ஆத்திரமும் அடைந்த நிலையில் மகிந்தவை சந்தித்து ஆனந்ததேரர் அதனைத் தெரிவித்தபோது, ஜனாதிபதியுடன் பேசுங்கள் என்று மட்டுமே தேரருக்கு மகிந்தவால் கூறமுடிந்தது.
ஆனால், ஆனந்த தேரர் கோதபாயவை சந்திக்க விரும்பவில்லை. மாறாக, பௌத்த பிக்குகளை கூட்டாக இணைத்துக் கொண்டு கோதபாயவுக்கு ஒரு பாடம் கற்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக ஆனந்ததேரரின் லெப்ரினன்டாக இணைந்திருப்பவர் பல பிரச்சனைகளின் ஊற்றுக்கண்ணான ஓமல்பே சோபிததேரர்.
எங்களை கோதபாய ஏமாற்றிவிட்டார் என்ற முதல் கோசம் இவர்களிடமிருந்து வந்துவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதைத்தான் கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித்தும் சொன்னார். எப்போது முஸ்லிம் தலைவர்கள் இதனைச் சொல்லப் போகிறார்கள்?
இத்தனை நிகழ்வுகளும் யாழ். நூலக எரிப்பின் நாற்பதாவது ஆண்டில் இடம்பெறுவதை காணமுடிகிறது. அதில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாகவும் எண்ணத் தோன்றுகிறது. நூலக எரிப்பு மாதத்தை நினைவூட்டும் குறிகாட்டிகளாக இவைகளைக் கொள்ளலாமா?