November 21, 2024

ஆடைத்தொழிற்சாலை திறப்பு:முல்லையில் விடாப்பிடி!

புதுக்குடியிருப்பில் ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை இன்று காலை மீள திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 5.45 மணியளவில் புதுக்குடியிருப்பின் பெண்கள் அமைப்புக்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர் ஜனமயந் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு சென்ற பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜனமயந் உட்பட  புதுக்குடியிருப்பு பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள் ஆறு பேர், உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யபப்ட்டவர்களை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தொற்று காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவானவானோர் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகள் கடந்த மாதம் முடக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே குறித்த ஆடை தொழிற்சாலையை இன்றைய தினம் மீண்டும் திறக்க முற்பட்ட போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.