November 22, 2024

அண்ணனின் ஆன்ம பலம் நமக்கு வழிகாட்டியாக! நம்பிக்கைச் செய்திகள் நமக்கு கிடைக்கின்றன!

„கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் கருத்துத் திணிப்புகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்த தேவையில்லை. இதுபோன்ற கருத்துத் திணிப்புகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் உளவியலை சிதைப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுபவை“என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை தேர்தல் நடந்த மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகான எக்சிட் போல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பெரும்பாலும் தமிழகத்தில் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டன.

இதேபோல் மேற்கு வங்காளத்தில் மம்தா மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பார் என்றும், அஸ்ஸாமில் பாஜகவுக்கு அதிக வாய்ப்புகள் என்றும் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எக்சிட் போல் குறித்த தனது கருத்துகளை அறிக்கையாக நேற்று (ஏப்ரல் 29) வெளியிட்டுள்ளார்.

„நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 நமக்கு மகத்தான நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது. கடுமையான உங்களது உழைப்பு மகத்தான வெற்றிகளுக்கு அடித்தளமாக மாறி இருக்கிறது. வியர்வை வடிந்த உங்களது முகங்கள் வெற்றிகளுக்கான புத்தொளி வீசுகிற ஒரு விடியலின் அடையாளங்களாய் மாறி இருக்கின்றன. பெரிய பொருளாதார வசதிகள், குடும்ப பின்புலம் இன்றி, சாதி மத உணர்வை சாகடித்து தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் விடியலுக்காக , நம் இனத்தின் அரசியல் அங்கீகாரத்திற்காக கடும் உழைப்பை சிந்தி நீங்கள் பாடுபட்டது ஒருபோதும் வீண் போகாது.

யாரும் செய்யத் துணியாத புரட்சிகர செயல்களை இந்தத் தேர்தலில் நாம் துணிந்து செய்திருக்கிறோம். இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 50 விழுக்காடு பெண்களை வேட்பாளர்களாக நிறுத்திய சாதனையை நாம் நிகழ்த்தி இருக்கிறோம். ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகத்திற்கு காட்ட நாளை நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் அமைச்சரவையில் 50 விழுக்காடு பெண்களுக்கு இடம், மாநில சட்டசபையின் சபாநாயகராக ஒரு பெண் என பல கனவுகளை நாம் நிறைவேற்ற போகின்ற காலம் நமக்கு கனிந்து வருகிறது.

பொதுத் தொகுதியில் ஆதி தமிழருக்கு இடம், இஸ்லாமிய தமிழர்களுக்கு மற்ற எல்லாக் கட்சிகளை காட்டிலும் அதிக வாய்ப்புகள், தமிழர் நிலத்தில் காலம் காலமாய் புறக்கணிக்கப்பட்ட பல எளிய சமூகங்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என பல முத்திரைகளை நாம் இந்த தேர்தலில் பதித்திருக்கிறோம். சமரசம் இல்லாத நமது போர்க்குணம் பல இலட்சக்கணக்கான எளிய வாக்காளர்களின் வாக்குகளை நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

வாக்குக்கு காசு கொடுக்காமல் 60 ஆண்டு கால அரசியல் சீரழிவை பற்றி பேசி, ஆற்றுமணல் காடு வளம், கனிம வளம் கொள்ளை அடிக்கப்பட்ட அவலங்களை பிரச்சாரம் செய்து, மாற்று அரசியல் என்றால் என்ன என்பதனை மக்களின் மனதில் பதிகிற அளவு உரத்த குரலில் முழங்கி, நாம் ஆற்றிய தேர்தல் பணிகள் தமிழ்த் தேசிய இன விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

வெறும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்தப் பூவுலகில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்குமானது எங்களது அரசியல், என்பதனை உணர்த்த நமக்கு கிடைத்த வாய்ப்பினை அனைத்தையும் சூழலியல் சார்ந்த கருத்துக்களை கொண்டு போய் சேர்க்கின்ற பிரச்சாரங்களாக மாற்றினோம்.

நம் மொழி காக்க நம் இனம் காக்க நம் மண் காக்க நம் மானம் காக்க இன்னுயிர்த் தந்த மாவீரர்களின் மூச்சுக்காற்று நம்மை ஒவ்வொரு நொடியும் வழி நடத்தியது. நம் உயிர்த் தலைவர், என் உயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்களின் ஆன்ம பலம் நமக்கு வழிகாட்டியாக நின்றது.

கடுமையாக உழைத்து கம்பீரமாக இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்கிற உங்கள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

நம்பிக்கையான பல செய்திகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. பெரும் மாற்றம் ஒன்றுக்கு தமிழகம் தயாராகிவிட்டது.

பெண்கள், புதிய வாக்காளர்கள், மாற்று அரசியலின் பாற் நம்பிக்கை கொண்டவர்கள், படித்த இளைஞர்கள், என சமூகத்தின் பரவலான மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்கின்ற நம்பிக்கைச் செய்திகள் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. முன் எப்போது காட்டிலும் மகத்தான வெற்றிகளை இந்தத் தேர்தலில் நாம் அடைவோம் என்பது உறுதி. அந்த நம்பிக்கை தருகிற பலத்தோடு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிகழ்வுகளில் முழுமையாக பங்கேற்று நமது இனமானக் கடமையை பூர்த்தி செய்வோம்“ என்று கட்சியினருக்குக் கட்டளையிட்டுள்ள சீமான் எக்சிட் போல் பற்றியும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

„கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் கருத்துத் திணிப்புகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்த தேவையில்லை. இதுபோன்ற கருத்துத் திணிப்புகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் உளவியலை சிதைப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுபவை. கடந்த காலத்தில் கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் வெளியான எதையும் சரியானவையாக இருந்ததில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. எனவே இது போன்ற எதிர்மறைச் செய்திகளை, புறக்கணித்துவிட்டு நம்பிக்கைகளோடு ‌ வாக்கு எண்ணிக்கை நிகழ்விற்கு நாம் தயாராவோம்.

2.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள். குறித்த நேரத்திற்கு சென்று, நோய்த் தொற்றுக் கால விதிகளை கடைபிடித்து வாக்கு எண்ணிக்கை நிகழ்வினை இராணுவ ஒழுங்கோடு நமது உறவுகள் நிகழ்த்திட வேண்டும்.

நமது கடும் உழைப்பு எந்த அளவிற்கு சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பதனை கண்டிட முதல் வாக்கு எண்ணும் நொடியில் இருந்து இறுதி வாக்கு எண்ணும் நொடி வரை இருந்திட வேண்டும்.

கடுமையான நோய் தொற்று காலமான இக்காலகட்டத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றி, முழுமையாக மூக்கு வாய் பகுதிகளை மறைக்கின்ற முகக் கவசங்கள் அணிந்து , கிருமி போக்கிகளை பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கை மையங்களில் நாம் தமிழர் உறவுகள் மிகுந்த கவனத்தோடு செயல்படுங்கள்“என்று கூறியுள்ளார் சீமான்.