November 25, 2024

கொரோனா:முறுகும் பங்காளி!

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன. கொரோனா வைரஸின் சமூக பரவலைத் தடுக்க பொதுமக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பாராளுமன்றம், சுகாதாரக் குழுவுக்கு நான்கு முறை முன்வைத்த யோசனைகள் நிராகரிக்கப்பட்டன.

பூகோள வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த விஞ்ஞான ரீதியிலான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே தீர்மானம் எடுக்க வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சடுதியாக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:புத்தாண்டுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவலடைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதால் பி.சி.ஆர். பரிசோதனைகள் குறைக்கப்பட்டதுடன், கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அனைத்தும் அலட்சியப்படுத்தப்பட்டன.

சுகாதார பாதுகாப்பை முறையாகப் பின்பற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் தளர்த்தியது.

பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பேண வேண்டும் என தற்போது குறிப்பிடுவதால் எவ்வித பயனும் ஏற்படாது. கொரோனா வைரஸ் சமூகப் பரவலடைந்து விட்டது. புத்தாண்டு காலத்தில் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் தற்போதைய நெருக்கடி நிலை தோற்றம் பெற்றிருக்காது.

இவ்விடயத்தில் சுகாதார அமைச்சும் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டுள்ளது.

முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதை முற்றிலும் தடுத்தல், பொது போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்றுதல், உள்ளிட்ட விடயங்களில் சிறந்த சுகாதார பாதுகாப்பு கொள்கைகளை பின்பற்றும் திட்டத்தை பாராளுமன்ற சுகாதார குழுவுக்கு நான்கு முறை சமர்ப்பித்தேன்.

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அத்தீர்மானங்கள் செயல்படுத்தப்படவில்லை.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சுகாதார அமைச்சின் செயல்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் தாக்கம் சமூகப் பரவலடையவில்லை என்று ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டுக் கொண்டு முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்காமலிருந்தார்.

புத்தாண்டு காலத்திலும் சுகாதார அமைச்சு பொறுப்பற்ற வகையில் செயல்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட பி -117 என்ற வைரஸே தற்போது நாட்டில் இனங்காணப்பட்டுள்ளது. இது மிகவும் அபாயகரமானது. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன.

ஆகவே, பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்- என்றார்.