November 21, 2024

1000 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் கண்டுபிடிப்பு

இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு மரத்தடிகளை ஏற்றி வந்த கப்பலில் உள்ள  சரக்கு பெட்டகம் ஒன்றில் இருந்து 9 கறுப்பு நிற பைகளில் மறைத்து

வைக்கப்பட்டிருந்த 1000 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (20) மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.தூத்துக்குடி  சிதம்பரனார் துறைமுகம் வழியே தினசரி பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடை பெற்று வருகிறது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து அண்டை நாடுகளான இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு, சிங்கப்பூர் ,மலேசியா, சீனா, பனாமா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கும் நேரடி வர்த்தக சரக்கு கப்பல் போக்குவரத்து நடை பெறுகிறது.

இந்நிலையில் நேற்று  செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பல் ஒன்றில் கண்டெய்னர் மூலமாக கொக்கைன் போதைப் பொருள் கடத்த உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, புலனாய்வுத்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனையில் ஈடுபட்ட போது,  இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு 8 சரக்கு பெட்டகங்களில் மரத்தடிகளை ஏற்றி வந்த கப்பல் உள்ளே நிறுத்தப்பட்டிருந்தது.

அதில்   சரக்கு பெட்டகம் ஒன்றில் 9 கறுப்பு நிற பேக்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த 9 பைகளில் மொத்தம் 400 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப் பொருள் இருப்பது சோதனையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போதைப்பொருளை  பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை அனுப்பியவர் மற்றும் அதை பெறுபவர்களின் முகவரிகள் தொடா்பில் விசாரணை நடத்திய போது அவை போலியான முகவரிகள் என கண்டுப்பிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் போதைப் பொருளின் மதிப்பு சர்வதேச அளவில் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.