November 21, 2024

ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசுடமையாக்க வலியுறுத்தல்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும், தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழி பூசையும்,குடமுழுக்கும் நடைபெற வேண்டும், மே 8 – உண்ணாப்போராட்டத்தில் திரளாகப் பங்கேற்பீர், த.தே.பே. தலைவர் பெ. மணியரசன் அவர்களைத்தாக்கத் திட்டமிடும் நபர்களைக் கைது செய்க என்று நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில், முதலாவது தீர்மானமாக, ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும் என்று, ‘’தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரிப் பகுதியில் மலை வளத்தை அழித்தும், கானுயிர்கள் நாடமாடும் மலைப் பாதைகளை கட்டடங்களாக்கியும், பழங்குடி மக்களின் வாழ்விடங்களைப் பறித்தும், மிக விரிந்த நிலப்பரப்பில் ஈஷா மையக் கட்டடங்களை எழுப்பியுள்ளார் ஜக்கி வாசுதேவ்.

தமிழ்நாடு அரசு மலைவளப் பாதுகாப்புக் குழுவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஜக்கி வாசுதேவின் இந்த இயற்கை அழிப்பு வேலைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா மையத்தில் தொடர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்கள் மீறப்படுவதை சுட்டிக்காட்டி, அவற்றை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி மே 2017லேயே அறிவிப்பாணை அளித்திருக்கிறது.

இந்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஆதியோகி சிலையும், அதையொட்டி நிறுவப்பட்ட பல்வேறு கட்டடங்களும் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள் என்பதை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, அதன் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கண்டித்துள்ளது.

தியான லிங்கம் கோயில், ஆதியோகி சிலை ஆகியவை தமிழர் சிவநெறி மரபுக்கும், ஆகமங்களுக்கும் முரணான வகையில் எதேச்சாதிகாரமாக நிறுவப்பட்டுள்ளன.

ஈஷா மையத்திற்கு வரும் பக்தர்களின் ஆதரவு, தமக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தம்மை தமிழ்நாட்டின் ஒற்றை ஆன்மிகத் தலைவராக நிறுவிக் கொள்ள தவறான வழிகளைக் கையாள்கிறார் ஜக்கி வாசுதேவ்.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்நாட்டு சிவநெறி ஆன்மிக மரபுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டும், மலைவாழ் மக்கள் மற்றும் கானுயிர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் நிலங்களை ஆக்கிரமித்தும் “தனி அரசு” நடத்திக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ் இப்பொழுது தமிழ்நாட்டிலுள்ள இந்து அறநிலையத்துறையைக் கலைக்க வேண்டுமென்று கோயில்களுக்குள் போராட்டம் நடத்தி வருகிறார்.