November 21, 2024

சண்டித்தனமான அரசியலால் சர்வதேசத்தை வெல்ல முடியாது,சாணக்கிய சமத்துவ அரசியலே அதற்கு தேவை. ஜி.ஸ்ரீநேசன்

சண்டித்தனமான அரசியலால் சர்வதேசத்தை வெல்ல முடியாது,சாணக்கிய சமத்துவ அரசியலே அதற்கு தேவை. ஜி.ஸ்ரீநேசன்,முன்னாள்பா.உ,மட்டக்களப்பு. இன்றைய அரசியல் தலைவர்கள் பல வகையான அரசியல் மாதிரிகளைப் பின்பற்றுகின்றார்கள்.அவற்றில் சாணக்கிய அரசியல், சண்டித்தனமான அரசியல் என்பவையும் அடங்கும்.சாணக்கிய அரசியல் என்பது மதி நுட்பம், தர்க்கம், பகுத்தறிவு, காரண காரியத்தொடர்பு என்பவற்றுடன் தொடர்புபட்டது. சாணக்கிய அரசியல் இராஜதந்திரம், தந்திரோபாயங்களுடன் ஆழமான தொடர்புடையது. குறிப்பாக அபிவிருத்தியடைந்த முற்போக்கான ஜனநாயக நாடுகள் இப்படியான சாணக்கிய அரசியலைப் பின்பற்றி வெற்றியடைகின்றன. வேகமாக அறிவித்தியடையும் நாடுகளும் இப்படியான அணுகுமுறைகளைக் கையாள்வதுண்டு.இவ்வணுகுமுறையுடைய சாணக்கியமான நாடுகள் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தமது இறைமை, ஆளுமைகளால் பெருமளவில் தீர்ப்பதன் மூலம் வெற்றி கொள்ளுகின்றன. அந்நாடுகள் சர்வதேசப் பிரச்சினைகளையும் தீர்க்கின்றன அல்லது தீர்க்க முயலுகின்றன,வெற்றியும் காணுகின்றன. ஆனால் சண்டித்தனமான அரசியலைப் பயன்படுத்துகின்ற ஆட்சியாளர்கள் தமது உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் தள்ளாடுகின்றனர்.இப்படியானவர்கள் குறுகிய அடிப்படை வாதங்களால் தேர்தல் வெற்றிகளைப் பெற்றாலும்,உள்நாட்டுப் பிரச்சினைகளைத தீர்க்காமல் மேலும் சிக்கல்களை உருவாக்குகின்றனர். அடிப்படை வாதம், பிரித்தாளும் தந்திரம், அடக்குமுறை, அராஜகம், அழிப்புச் செயல் போன்றவை சண்டித்தனமான அரசியலின் இலட்சணங்களாகும். இத்தகைய போக்குடைய தலைவர்கள் உள்ளகப் பிரச்சினைளைத் தீர்க்காமல் வளர்த்து சர்வதேச வலையில் சிக்கவைக்கின்றனர். அல்லது சர்வதேசமயப்படுத்துகின்றனர்.அதாவது ஐக்கியநாடுகள்சபை வரை உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தள்ளிவிடுகின்றார்கள். அதன் பின்னர் உள்நாட்டில் கையாண்ட சண்டித்தனமான அரசியல் முறைமைகளைச் சர்வதேசத்திலும் கையாண்டு தோல்வியடைகின்றார்கள். இதனையே இலங்கையரசும் செய்துள்ளதாகவே உணரமுடிகின்றது. இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை 73 ஆண்டுகளாகத் தீர்க்கப்படவில்லை. மேலும், 2009 இல் யுத்தம் முடிந்த பின்னர் 12 ஆண்டுகளாக உண்மைக்கும் நீதிக்குமாக வடக்கு – கிழக்குத் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடுகின்றார்கள்.அப்பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. மாறாக அறவழிப் போராட்டங்களை அடக்கியொடுக்க அடாவடி நடவடிக்கைகளைக் கையாளுகின்றனர்.இப்படியான நிலையில்,இப்பிரச்சினை 2009 இற்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் கைகளுக்குள் அகப்பட்டுள்ளது.2019,2020 களில் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றிய பொதுசனப்பெரமுன அரசாங்கம் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட 40-1 பிரேரணையை நிராகரித்தது.அதாவது யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பானதும்,அதன் பிரதிபலிப்புகளோடு கூடியதுமான பொறுப்புரைத்தல்,நல்லிணக்கப்படுத்தல்,மனிதவுரிமையைப் பேணுதல்,மீளநிகழாமல் தடுத்தல் போன்ற தார்மீகப்பொறுப்புகளை அமைச்சர் தினேஸ் குணவர்தனா நிராகரித்து விட்டார். இவ்வாறான நிலையில் மீண்டும் மேலே குறிப்பிட் உள்ளீடுகள் மற்றும் மனிதவுரிமைப் பேரவையின் அவதானிப்புகளோடு கூடிய 46-1 பிரேரணை மனிதவுரிமைப் பேரவையால் 23/3/2021இல் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும்,எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன.14 நாடுகள் நடுநிலை வகித்தன.இப்பிரேரணையையும் இலங்கையரசு அலட்சியத்தோடு நிரகரித்துள்ளது.இறைமையுள்ள தன்னாதிக்கமுள்ள நாட்டின் உள்விவகாரங்களில் மனிதவுரிமைப் பேரவை தலையிட அதிகாரமில்லை என்பதே இலங்கை ஆட்சியாளர்களின் நிலைப்பாடாகும். ஜனநாயக அடிப்படையிலான மக்களின் அடிப்படை உரிமைகளை விடவும்,ஆட்சியாளர்களுக்கு தேவையாக இருப்பது நாட்டின் அதிகாரக் கருவியான இறைமையாகவே இருக்கின்றது. இந்நிலையில்,பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதியினை உள்நாட்டில் பெற முடியாத நிலையில்,சர்வதேசத்தை நாடுவதில் தவறுகள் இல்லை என்பதை ஆட்சியளர்கள் உணராமல் இருப்பதுதான் வேடிக்கையாகவுள்ளது.சாணக்கிய அரசியலை விடுத்துச் சண்டித்தனமான அரசியல் மூலமாகச் சர்வதேசத்தை ஏமாற்ற முடியும் என்று நமது ஆட்சியாளர்கள் நினைப்பது விந்தையாகவுள்ளது.ஆனால் ஆட்சியாளர்கள் மனிதவுரிமைப் பேரவை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து துவண்டு நிற்கிறார்கள்.தோல்வியைக் கூட வெற்றியாகச் சிங்கள மக்களிடம் காட்டச் சிறுபிள்ளைத்தனமாக வியாக்கியானம் வேறு அளிக்கிறார்கள்.உள் நாட்டுப் பெரும்பான்மை இனமக்களை அடிப்படைவாதத்தால் ஏமாற்றுகிறார்கள்.தமிழ் பேசும் மக்களை சண்டித் தனத்தாலும்,அடிப்படை வாதத்தாலும் மிரட்டுகிறார்கள்,ஏமாற்றுகிறார்கள். இதுதான் 73 ஆண்டுகளாக நடைபெறுகின்றது. பண்டா-செல்வா ஒப்பந்தம்,டட்ளி-செல்வா ஒப்பந்தம்,பான்கீமூன்-மகிந்த உடன்பாடு நிறைவேற்றப்பட்டிருந்தால் சர்வதேசம் வரை எமது பிரச்சினை நீண்டிருக்காது,சென்றிருக்காது.பிரச்சினையைச் சர்வதேசம் வரை கொண்டு சேர்த்தவர்கள் இலங்கை ஆட்சியாளர்களேயாவர்.அதிலும் குறிப்பாக நமது நாட்டுப் பிரச்சினையை 1989களில் சர்வதேசரீதியாக மனிதவுரிமைப் பேரவைக்கு முதன் முதலாகக்கொண்டு சென்றவர் தற்போதையப் பிரதமர் மகிந்த ஆவார் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டியுள்ளது. சாணக்கிய அறிவார்ந்த அரசியல் மூலமாக உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு கண்ட ஆட்சியாளர்கள் சர்வதேசத்திகுள் தமது பிரச்சினைகள் செல்லாமல் தடுத்து நிறுத்தினார்கள்.மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு,நாட்டின் இறைமையையும் பிரயோகித்துக் கொண்டனர்.ஆனால் அடிப்படைவாத சண்டித்தன அரசியலால் உள்நாட்டுப் பிரச்சினைகள் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன.அவற்றுக்கான தீர்வுகள் காணப்படுவதில்லை. இதனால் அப்பிரச்சினைகள் சரவதேத்தின் பிடிக்குள் சென்று விடுவதோடு,பூகோள அரசியலின் தேவைக்கு ஏற்ப கையாளப்படுகின்றன.அப்படியான நாடுகளின் இறைமை சரவதேசத்தில் அரசியல் தேவைக்கான சந்தைப் பொருளாகிறது. இன்று இல்லாத அன்றைய யூகோஸ்லாவியாவின் தலைவர் மாஷல் டிற்ரோ தனது சாணக்கிய அறிவு பூர்வமான அரசியலினால் சேர்பியர்கள்,
அல்பேனியர்கள்,குறேசியர்கள் போன்ற பல்லின மக்களை சமத்துவமாக வழி நடாத்தினார்.நாட்டின் இறைமையையும்,மக்களின் அபிலாசைகளையும் இருகண்களாகக் கொண்டு ஆட்சி செய்து வெற்றி பெற்றார்.அதேவேளை டிற்ரோவிற்குப் பிற்பட்ட காலத்தில் ஆட்சி செய்த ஸ்லபோடன் மிலோசபிக் என்பவர் அடிப்படைவாதம்,பிரித்தாளல் மூலமாக சண்டியன் பாணியில் ஆட்சி செய்தார்.தான் சார்ந்த சேர்பியப் பெரும்பான்மை இனத்திற்குப் பக்கச் சார்பாக இருந்து கொண்டு அல்பேனியர்,குறேசியர்களை அடக்கி ஒடுக்கியும் ஆட்சி செய்தார்.சேர்பியப்படைகள் மூலம் மாற்று இனத்தவர்களை அழித்து இனச்சுத்திகரிப்புச் செய்தார்.அந்நாட்டில் பாரிய மனிதப் பேரவலம்,இனவழிப்பு ஏற்பட்து.இந்நிலையில் பன்னாட்டு அமைப்புகளையும் ஏமாற்ற நினைத்தார்.இறுதியில்,ஐ.நா படைகள் அங்கு சென்று மிலோசபிக்கையும்,இராணுவ அதிகாரிகளையும் கைது செய்தனர்,சர்வதேசக்குற்றவியல் நீதிமன்றத்தில்பாரப்படுத்தினர்.விசாரணை மூலமாகப் பாரியதண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மிலோசபிக் விசாரணைக் காலத்தின் போதே சிறையில் மரணித்தமையும் குறிப்பிடத் தக்கதாகும். மேலும் ஐ.நா.சபையின் கண்காணிப்புடன் மக்களின் கருத்துக் கணிப்புக்கு அமைய யூக்கோஸ்லாவியா சேர்பியா,கொசோவா,மொண்டிநீக்றோ என்று பலநாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.அடிப்படைவாதம், சண்டியர் அரசியல்,இனவழிப்பு,மனிதப் பேரவலம் காரணமாக யூகோஸலாவியா பன்னாடுகளாகப் பிரியும் நிலை ஏற்பட்டது.இங்கு யூகோஸ்லாவியாவின் சர்வாதிகார இறைமை என்பதை விட சிறுபான்மை மக்களின் வாழும் உரிமையே முக்கியத்துவமும்,முன்னுரிமையும் பெற்றது. இந்தப் பட்டறிவை நம் நாட்டு ஆடசியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.சாணக்கியமற்ற சண்டிக்கட்டு அரசியல் செய்த லிபியத் தலைவர் கேணல் கடாபி,ஈராக் ஜனாதிபதி சதாம் குசைன்,உகண்டா ஜனாதபதி இடியமின்,பாகிஸ்தான் தலைவர்களான ஷியாவுல்ஹக்,பர்விஸ் முஸ்ஸரப்,பிலிப்பைனஸ் தலைவர் மாக்கோஸ்,ஈரான் மன்னர் ஷா ஆகியோர் வரலாற்றில் என்ன ஆனார்கள் என்பதை ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்,ஆலோசகர்கள்,மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். வரலாறு நல்ல-வல்ல ஆசான்,அந்த ஆசானிடம் இருந்து பட்டறிவுகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.கெட்டறிவுகளைக் களைந்துகொள்ள வேண்டும்.நல்லதைக் கற்கவேண்டும் நல்லவற்றைச் செய்யவேண்டும்.நாட்டின் வரலாற்றில் நாயகர்களாய்த் திகழவேண்டும்.கடந்த தப்புகளுக்கான பிராயச்சித்தம் யாதெனில் நடப்பவற்றையாவது நல்லவையாக்கிக்கொள்வதாகும். ஆட்சியாளர்கள் பொறுப்பான பதவிகளில் இருக்கும் போதே இவற்றை ஆற்ற முடியும்.ஜே.ஆர்.ஜெயவர்ததனா ஒரு தடவை கூறியிருந்தார். ‘இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சமஷ்டி முறைமையே பொருத்தமானது,அதற்கான காலம் வந்துவிட்டது’ என்பதே அக்கருத்தாகும்.ஆனால் அப்போது அவர் பதவியில் இல்லை.அதே போன்று சந்திரிக்கா அம்மையார் தான் மூன்று தவறுகளைச் செய்துவிட்டதாகக் கூறினார்.அதே போன்றுதான் தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள மைத்திரியும் தான் ஐனாதிபதியாக இருந்த போது செய்த தவறை உணர்ந்திருப்பார்.மேலும் ரணில் கூடப் பிரதமராக இருந்தபோது தான் விட்ட தவறுகளைஉணரந்திருப்பார்.பண்டார நாயக்க கூட ஆரம்பத்தில் இலங்கைக்குச் சமஷ்டி ஆட்சியே பொருத்தமானது எனக் குறிப்பிட்டார்.பின்னர் அடிப்படைவாத அரசியலை விதைத்து ஆட்சியைப் பிடித்தாலும்,தான் விதைத்த அடிப்படைவாதத்தால் பலியாக்கப்பட்டார்.ஒவ்வொருவரும் தமது பதவிகளை இழந்த பின்னர்தான் தவறுகளை உணர்ந்தார்கள்,ஞானம் பெற்றார்கள்.சுடலை ஞானம் யாருக்கும் உதவாது.ஆம்,கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது.இப்போது பொறுப்பான பதவியிலுள்ளவர்கள் இதனை உணரமாட்டார்கள்.உணர்ந்தால் மட்டுமே நாட்டிற்கும்,மக்களுக்கும் நன்மை கிடைக்கும்.இல்லையென்றால்,கடந்த காலம் போன்றே நடக்கும் காலமும் அமையும். தீர்வுக் குழந்தை சுகப்பிரவசமாகப் பிறக்காவில்லை என்றால் உள்நாட்டுப் பொறிமுறை உருப்படியாக இல்லை என்துதான் அர்த்தமாகும்.இதனால் சீசர் (சத்திர சிகிச்சை) மூலமாகவே தீர்வுக் குழந்தை பிறக்க வேண்டியும் ஏற்படலாம்.வைத்தியர் யார் என்பதை எதிர்காலந்தான் எதிர்வு கூறும் அல்லது தீர்மானிக்கும்.சுதந்திரமானதில் இருந்து இந்நாட்டை சிங்களத் தலைவர்களே ஆட்சி சய்தார்கள்,செய்கிறார்கள்.எனவே நாட்டின் பிரச்சினைகளின் தோற்றம்,வளர்ச்சி,யுத்தம்,மனிதப் பேரவலம்,நீதி மறுப்பு,பிரச்சினைகள் தீர்க்கப்படாமை அனைத்திற்கும் ஆட்சி செய்த தலைவர்களே காரணகர்த்தாக்களாக இருக்கின்றனர். எதிர்காலத்திலாவது ஆளுந்தலைவர்கள் திருந்த மாட்டார்களா? என்பதுதான் மக்களின் ஏக்கம் கலந்த கேள்வியாகும்.இதற்கான பதில் ஆட்சியாளர்களிமே இருக்கின்றது.இதுவரை கேள்விக்குறிகளாக மக்கள் உள்ளளனர்,பதில் தெரியாத பக்குவம் குறைந்த தலைவர்களாக ஆட்சியாளர்கள் இருந்தார்கள்.இனியும் இருக்கத்தான் போகின்றார்களா? என்பது உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் தொடுக்கப்படும் அன்புக்கேள்வியல்ல,அம்புக்கேள்வியாகவுள்ள்ளது.சாணக்கியமும்,சமத்துவமும் மிக்க தலைவர்களால் மட்டுமே இக்கேள்விக்கு யதார்த்தமான பதிலைத் தரமுடியும்.அப்படியானவர்கள் இங்குள்ளார்களா என்பது அடுத்த கேள்வியாகும்.சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் சாணக்கிய அரசியல்வாதிகளாகக் காட்டிக்கொண்ட பேராசிரியர்கள் கூட இன்று தமது அரசியல் இருப்புக்காக சண்டிக்கட்டு அரசியல்வாதிகளிடம் சரணாகதி அடைந்துவிட்டார்கள். ‘தக்கன பிழைக்கும் தகாதன அழியும்’ என்ற இயற்கைத் தேர்வுக் கூர்ப்புக் கொள்கை இலங்கையின் தவறான அடிப்படைவாதத்திற்குப் பொருந்தலாம்.ஆனால் சரவதேச சனநாயக அரசியலுக்குப் பொருந்தாது.பொருந்தியிருந்தால் உலகில் சதாம்,கடாபி,மாக்கோஸ்,இடியமீன் போன்றவர்களின் ஆட்சி இன்றும் தொடரந்திருக்கும்.இவற்றை எமது தலைவர்கள் உணராவிட்டாலும் சர்வதேசம் உணர்த்த வேண்டிய காலம் கனிந்துவிட்டது என்பது உண்மையாகும்.