யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் தூபி மீளத்திறப்பு!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா திறந்துவைப்பார் என பல்கலை மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி எட்டாம் திகதி இடித்தழிக்கப்பட்டது.
இதையடுத்து, அதனைக் கண்டித்து மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்ததுடன், மக்களின் எழுச்சி மற்றும் பன்னாட்டு ரீதியிலான கண்டனங்களைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணங்கியது.
அத்துடன், பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமானது.
இந்நிலையில், அதன் கட்டுமானப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி அதனைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.