November 21, 2024

முன்னாள் காதலன் தொந்தரவு:- கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மாணவி!

முன்னாள் காதலன் தொந்தரவு:- கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற   மாணவி!

முன்னாள் காதலன் தனக்கு தொந்தரவு கொடுப்பதால் கூலிப்படை ஏவி கொலை செய்ய துணிந்திருக்கிறார் நெல்லை மாணவி ஒருவர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பெத்தானியாபுரம் மலைப் பகுதியில் இருந்து தப்பி வந்த மாணவன் ஒருவர், அந்த வழியாக ரோந்து வந்த களக்காடு இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷிடம், மலையில் பதுங்கியிருக்கும் இளைஞர்கள் சிலர் தன்னைக் கொல்ல வந்ததாக மிரட்சியுடன் புகார் அளித்திருக்கிறார்.

அதனால் போலீஸ் படையுடன் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், அந்த மலையில் சந்தேகத்துக்குரிய வகையில் பதுங்கியிருந்த 4 இளைஞர்களை மடக்கிப் பிடித்துள்ளார். இருவர் தப்பியோடி விட்டனர். அவர்களிடம் இருந்து 7 நாட்டு வெடிகுண்டுகள், 4 அறிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிடிபட்ட முத்துமனோ, சந்திரகேகர், மாதவன், கண்ணன் ஆகிய நான்கு பேரும் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள் என்பதால் எதற்காக நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது பற்றி போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.

அதில், அதிர்ச்சியளிக்கும் வகையில் நான்கு பேரும் கூலிப்படையாகச் செயல்பட்ட விவரம் தெரியவந்திருக்கிறது. ஒரு காதல் விவகாரத்திற்காக இளைஞர்கள் 6 பேரும் பணம் பெற்றுக் கொண்டு கூலிப்படை போல செயல்பட்டு கொலை செய்யத் துணிந்த விவரம் தெரிய வந்ததும் போலீஸாரே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், `நாங்கள் அனைவரும் நண்பர்கள். எங்களுக்கு எந்த வேலையும் இல்லாததால் ஊர் சுற்றிக் கொண்டிருப்போம். சில தினங்களுக்கு முன்பு எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் எங்களை அழைத்து,என்னை மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தொந்தரவு செய்யிறான். பள்ளியில் படிக்கும்போது இரண்டரை வருஷம் நாங்க காதலிச்சோம். இப்போ எனக்கு அவனைப் பிடிக்கல.

ஆனாலும் அவன் என்னைத் தொந்தரவு செய்யிறான். அவனுடன் நான் நெருக்கமா இருக்கும் படங்களை எங்க வீட்டில் காட்டுவதா மிரட்டுறான். அவனை கொலை செய்தால் மட்டுமே என்னால நிம்மதியா வாழ முடியும். நம்ம சமுதாயத்தைச் சேர்ந்த நீங்கள் எனக்கு உதவி செய்யணும். அதற்காக நான் உங்களுக்கு 25,000 ரூபாய் தர்றேன்’ என்று உதவி கேட்டார்.

பணம் தருவதாக அந்த மாணவி சொன்னதால் நாங்கள் அந்த வேலையைச் செய்ய ஒப்புக் கொண்டோம். அவனை ஆள் நடமாட்டம் இருக்காத பெத்தானியா மலையில் உள்ள பொத்தைக்கு அழைத்து வருமாறு சொன்னோம். அதன்படி அந்த மாணவி, அவசரத் தேவைக்காக ரூ.25,000 பணம் தேவைப்படுவதால் அதை எடுத்துக் கொண்டு மலைப் பகுதிக்கு வருமாறு அவனை அழைத்தார்.

அந்த மாணவன் பணத்தோடு மலைப் பகுதிக்கு வந்தான். அவனை மாணவி அடையாளம் காட்டியதும் மறைந்திருந்த நாங்கள் அவனைச் சுற்றி வளைத்துப் பிடித்தோம். பயந்த அவன், `இனிமேல் அந்த மாணவியை தொந்தரவு செய்ய மாட்டேன். இனி உங்கள் வழிக்கே வர மாட்டேன்’ என்று கெஞ்சினான். அவனைக் கொல்ல முயன்றபோது எங்களிடம் இருந்து தப்பியோடி மறைந்து விட்டான்.

நாங்கள் அந்த மாணவியை வீட்டுக்குச் செல்லுமாறு சொல்லிவிட்டு அங்கே மறைந்திருந்தபோது போலீஸார் எங்களைச் சுற்றி வளைத்துப் பிடிச்சுட்டாங்க. நாங்க பணத்துக்காகத் தான் அந்த மாணவனைக் கொல்ல நினைச்சோமே தவிர அவனுக்கும் எங்களுக்கும் எந்த பகையும் கிடையாது” என்று தெரிவித்து போலீஸாரையே அதிர வைத்திருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தப்பிய மாணவன் அளித்த புகாரின் பேரில் கூலிப்படையாகச் செயல்பட்ட 6 பேர் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவி ஆகிய ஏழு பேர் மீதும் கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிடிபட்ட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தப்பிய தீபக்ராஜ், ஊசி பாண்டியன் மற்றும் கூலிப்படை மூலம் கொலை செய்யத் தூண்டிய மாணவி ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள். அந்த மாணவி பிடிபட்டால் கூடுதல் தகவல் கிடைக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.