November 22, 2024

கோத்தா கண்ணிற்கு புலி,பூனை எல்லலாம் ஒன்றாக தெரிகிறது!

எலிகளை   பிடிப்பதற்காக   வீடுகளில்   செல்லப்   பிராணிகளாக வளர்க்கப்படும்   பூனைகள்  புலிகளை   ஒத்திருக்கின்றன   என்று   கூறுவதோ   அல்லது   கருதுவதோ, பாரபட்சமின்றி    சிந்திக்கும்    எவராலும்    ஏற்றுக்கொள்ளப்பட    முடியாதவை  என சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபை முதல்வர் கைது செய்யப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,  தமிழீழ    விடுதலைப்    புலிகள்    இயக்கத்தை    மீளுருவாக்கம்    செய்ய    முயன்றார்    என்ற குற்றப்புகாரின்   பேரில்   யாழ்ப்பாண   மாநகர   முதல்வர்   சட்டத்தரணி வி.   மணிவண்ணன் பயங்கரவாத  தடுப்பு சட்டத்தின்    கீழ்   கைது   செய்யபட்டு   தடுத்து   வைக்கப்படுடிருப்பது  சட்டத்திற்கு விரோதமானது.

யாழ்ப்பாண   மாநகர   சபைக்கென   ஐந்து   பேர்   கொண்ட   காவல்   படையினை,   புலிகள் இயக்கத்தின்  காவல்  துறையின்  சீருடையை   ஒத்த  சீருடை  அமைத்து  செயற்படுத்தினார் என்பதே  அவருக்கு  எதிரான  குற்றப்புகாரின்  உள்ளடக்கம்  ஆகும்.
யாழ்ப்பாண     மாநகரின்     பொது     இடங்களில்    குப்பை     கொட்டுவதையும்,     வெற்றிலை துப்புவதையும்,    பொது    இடங்களில்    வாகனங்கள்    நிறுத்தப்படுவதையும்,    சட்ட    விரோத செயற்பாடுகள்       மேற்கொள்ளப்படுவதையும்       தடுப்பதற்கு,       இக்       காவல்       படை  அமைக்கப்படுவதாக  மாநகர  முதல்வரால்  பகிரங்கமாக  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்   சூழ்நிலையிலேயே,   மாநகர   முதல்வர்   மீது   பயங்கரவாத   தடுப்பு சட்டம்   இப்போது பிரயோகிக்கபட்டுள்ளது.

குறித்த   காவல் படை   பற்றிய   தவறான   அல்லது   திரிபுபடுத்தப்பட்ட   வியாக்கியானத்தின் அடிப்படையில்  மாநகர  முதல்வர்  மீது  சட்ட  நடவடிக்கை  மேற்கொள்ளபட்டிருப்பதாக  நாம் கருதுகின்றோம்.

ஏனெனில்,  காவல் படை  என்ற  பெயருடன்,  மாநகர  சபையின் ஐந்து  ஊழியர்களை  உள்ளடக்கி அறிவிக்கபட்ட   குறித்த   காவல்   படை,    அதன்   நோக்கங்கள்,   பணிகள்   என்பனவற்றின் அடிப்படையில்   ஓர்  காவல்துறைப் படையாக  ஒருபோதுமே  கருதப்பட  முடியாதது  ஆகும்.

நகரின்    சுகாதார    மேம்பாட்டினை    பிரதான    நோக்கமாகக்    கொண்டு    இந்தக்    குழுவுக்கு சூட்டப்பட்டு இருக்கும்   ‘காவல்   படை’   என்ற   தமிழ்  பெயரினை  அடிப்படையாக   வைத்து, அதனை  ஓர்  காவல்துறைப்  படையாக  அர்த்தப்படுத்துவது  என்பது  தவறானது.

எமது நாட்டின்  ‘பொலீஸ்  சேவை’   மற்றும்  ‘பொலீஸ்  நிலையம்’   என்பனவற்றிற்கு  தமிழில் முறையே   ‘காவல்   துறை’,   ‘காவல்   நிலையம்’   என்ற   சொற்கள்   உத்தியேக   பூர்வமாக பிரயோகிக்கப்படுவதில்லை.

‘பொலீஸ்’   என்ற   ஆங்கிலச்   சொல்லே   உத்தியோகபூர்வமாக   நடைமுறையில் உள்ளது. காவல்   துறை,   காவல்   நிலையம்   என்ற   பதங்கள்   சில பல   சந்தர்ப்பங்களில்  மட்டுமே ஊடகங்களால்  உபயோகப்படுத்தப்படுகின்றன.

மேலும்,     குறித்த     காவல்     படை     தெரிவு     செய்யப்பட்ட     மாநகர     சபை பணியாளர்களில்  எவருக்கும்,  வழக்கமாக  காவல்துறையினருக்கு  வழங்கப்படும்  எந்தவொரு  பயிற்சி நெறியும்    அளிக்கப்பட்டிருக்கவில்லை    என்பதோடு,    ஓர்    குண்டாந்தடி கூட எவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை.

உண்மையில்,  இந்தக்  காவல்  படை  ஓர்  சுகாதார  சேவை துணை  அணியாகவும்,  பொது இடங்களில்   வாகனங்கள்  நிறுத்தப்படுவதை  ஒழுங்குபடுத்தும்  ஓர்  பாதுகாப்பு  குழுவாகவுமே அமைக்கபட்டிருந்தது  என்பது  தெளிவானது.
தனியார்  பாதுகாப்பு  சேவை  நிறுவனங்களில்  பணியாற்றும்  ஊழியர்களின்  சீருடைகளை  ஒத்த விதத்திலேயே,  இந்த  மாநகர  சபை  ஊழியர்களின்   சீருடைகளை  அமைந்திருந்தன.இருந்தும்,  காவல்  படை  என்ற  பெயரும்,  சீருடையின்  நிறங்களும்  அநாவசிய  சந்தேகத்திற்கு அடி  கோலியுள்ளன.

இந்த  அமைப்பினை  நிறுவியதன்  மூலம்  சட்ட  ஏற்பாடுகள்  எவையாவது  மீறப்பட்டிருந்தால், சாதாரண  சட்டத்தின்  கீழ்  அரசாங்கம்  தாராளமாக  நடவடிக்கைகளை  எடுத்திருக்க  முடியும், மாறாக,      பயங்கரவாத      தடுப்பு சட்டத்தை இந்த      விவகாரத்தில்      அரசாங்கம் பிரயோகித்திருப்பது யதார்த்தபூர்வமானஅணுகுமுறையோ அல்லது       நீதியான நடவடிக்கையோ  அல்ல.

பயங்கரவாத     தடுப்பு சட்டத்தின்     கீழ்     பிணை     வழங்கும்     அதிகாரம்     என்பது, நீதிமன்றங்களுக்கு   பதிலாக   சட்ட  மாஅதிபருக்கு   மாத்திரமே   உள்ளது   என்பதாலும்,   18 மாதங்களுக்கு  மேற்படுத்தாத  காலத்திற்கு  சந்தேகநபர்  ஒருவரை  தொடர்ந்து  தடுப்புக்காவலில் வைத்திருக்கும்  அதிகாரம்  பாதுகாப்பு  அமைச்சருக்கு  வழங்கப்பட்டிருப்பதாலும் ,  யாழ்ப்பாண மாநகர   முதல்வர்   சம்பந்தபட்டுள்ள   இந்த   விவகாரம்   அநாவசியமானதொரு   அரசியற் சர்ச்சையை  ஏற்படுத்தக்  கூடியது  என்று எதிர்வு  கூற  முடியும்.

மாநகர   முதல்வருக்கும்,   மாநகர   சபைக்கும்   எதிராக   குற்றப்புகார்   அளித்த   நபர்களும், பாராளுமன்றத்தில்   இந்த   விவகாரத்தை   எழுப்பி,   உரத்துக்   குரல்   கொடுத்த   எதிரணியான ஐக்கிய  மக்கள்  சக்தியும்  குறுகிய  அரசியல்  நோக்கங்களோடு;  செயற்பட்டுள்ளன.

பயங்கரவாத  தடுப்பு சட்டத்தினை  நாடியதன்   மூலம்   இதனை   உரிய   முறையில்   கையாள அரசாங்கமும்  தவறியுள்ளது.
இப்பொழுது  கூட,  நிலைமை  ஒன்றும்  கைமீறிப்  போய்விடவில்லை
இந்த   விவகாரத்தை   முழுமையாக   மீள்   பரிசீலனை   செய்து,   எந்தவொரு  சட்ட   மீறல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக    அரசாங்கம்     கருதுமானால்,     பயங்கரவாத     தடுப்பு சட்டத்திற்கு பதிலாக,  சாதாரண  சட்டத்தின்  கீழ்  உரிய  சட்ட  நடவடிக்கைகளை  முன்னெடுக்க  முடியும்.

உள்ளூராட்சி    அமைப்பு    ஒன்றினால்    மேற்கொள்ளப்படுகின்ற    பகிரங்கமான    ஏற்பாடு   ஒன்றினை   பயங்கரவாத  தடுப்பு சட்டத்தை   பிரயோகித்திருப்பதும்   விடுதலைப்   புலிகள்
இயக்கத்தை      மீளுருவாக்கம்      செய்ய      முயன்றதாக      பாரதூரமான      குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு இருப்பதும்,   பயங்கரமானதோர்   சூழ்நிலையை   ஏற்படுத்துகின்றன
என்பதை பொறுப்போடு சுட்டிக்காட்ட  நாம்  விரும்புகின்றோம்.
எலிகளை   பிடிப்பதற்காக   வீடுகளில்   செல்லப்   பிராணிகளாக   வளர்க்கப்படும்   பூனைகள்  புலிகளை   ஒத்திருக்கின்றன   என்று   கூறுவதோ   அல்லது   கருதுவதோ, பாரபட்சமின்றி    சிந்திக்கும்    எவராலும்    ஏற்றுக்கொள்ளப்பட    முடியாதவை    என்பதையும்
இச்சந்தர்ப்பத்தில்  தெரிவித்துக்  கொள்கின்றோம். என குறிப்பிடப்பட்டு உள்ளது