November 22, 2024

தரையிறங்கிய முதல் விமானம் எனும் பெருமையை பெற்ற ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்

பல மாதங்களுக்கு பின்னர் மெல்போர்னில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானம் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின், விக்டோரியாவின் சர்வதேச ஹோட்டல் தனிமைப்படுத்தல் திட்டத்தின் கீழ் பல மாதங்களின் பின்னர் பயணிகள் விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் – 604 என்ற விமானம் அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானத்தில் பயணித்த 11 பயணிகள் பேருந்து மூலம் இருவார கால தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக பாதுகாப்புடன் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை டோஹா, சிங்கப்பூர் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து இன்றைய தினம் மொத்தம் 106 பயணிகள் வருவார்கள் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் பயணிகள் விமானங்கள் விக்டோரியா மாநிலத்தில் தரையிறங்கவில்லை.

கொவிட்-19 அச்சுறுத்தல்கள் காரணமாக ஹோட்டல்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிருந்து விலகியதுடன் மாநிலத்தின் பல பகுதிகளும் முடக்கல் நிலையில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.