November 24, 2024

புலிகளின் காவல்துறை சீருடையை மாநகர காவல் படை பயன்படுத்த முடியாது பொலிசாரல் சீருடைகள் பறிமுதல்

யாழ்பாணம் மாநகரை சுத்தமாகவும் சீராகவும் வைத்திருக்கும் நோக்கில் மாநகர முதல்வர் மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட மாநகர காவல்படையின் சீருடை விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்ததாக காணப்பட்டதால் யாழ்ப்பாண பொலிசாரினால் அவை நேற்று இரவு பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மாநகர காவல்படை உத்தியோகபூர்வமாக இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவிருந்த நிலையிலேயே யாழ்ப்பாணப் பொலிசாரினால் முதல்வர், ஆணையாள உள்ளிட்டோர் யாழ் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு குறிப்பிட்ட சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கையில்  விடுதலைப் புலிகள் அமைப்பு பயஙகரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களோடு தொடர்புடைய சீருடைகள் உள்ளிட்ட விடயங்கள் பயன்படுத்த முடியாது எனத் தெரிந்தும் சட்டத்தரணியான மாநகர முதல்வர் மணிவண்ணன் மாநகர காவல்படைக்கு புலிகளின் காவல்துறை சீருடையை தயாரித்தமை சிறுபிள்ளைத்தனம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

மணிவண்ணனின் இந்த பொறுப்பற்ற செயலால் யாழ் மாநகரை சுத்தமாக வைத்திருக்கிம் முதல் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே தேவையில்லா தடை ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இவற்றை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.