படம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்?
தமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் சமூக ஊடக வலைப்பின்னல் மூலம் பகிரப்பட்ட புகைப்படத்தை பார்வையிட்ட நிலையிலேயே அவர் கைதாகியுள்ளார்.
இளைஞனின் அலைபேசியில்; தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படம் உள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இலங்கை புலனாய்வு கட்டமைப்பின் ஊடாக புகைப்படத்தை அனுப்பி பொறிவைத்து பிடித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தலின் கீழ் இளைஞன் மீது பி அறிக்கையை கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிவான் இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்து இளைஞனை வரும் ஏப்ரல் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.