November 21, 2024

மனித உரிமை பேரவை – அறிந்து கொள்வோம் ராஜி பாற்றர்சன்

தற்போது நடைபெற்று முடிந்த 46-ம் கூட்டத்தொடரில் நிறைவேற்றபட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பரிந்துரைக்கவில்லையென்பது தமிழர்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது. இந்த விடயம் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில் தமிழர் தரப்பு மிகவும் கடினமாக முயற்சி செய்தார்கள் என்பதை மறுக்க முடியாது. எனினும் இந்த தீர்மானம் கடந்த காலத்துடன் ஓப்பிடும் போது காத்திரம் குறைந்ததொன்றாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்படும் அதே வேளை, ஒரு சிலர் இலங்கை விவகாரம் மனித உரிமை சபையிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பொதுசபைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும், அப்போதுதான் பாதுகாப்பு சபைக்கு பரிந்துரை செய்ய முடியும் எனவும் வாதிடுகின்றனர். எது எப்படியிருந்தாலும் அப்பாவித்தமிழர்கள் தற்போது யார் சொல்வது சரி என புரிந்து கொள்ள முடியாமல் குழப்ப நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர் என்பதுதான் நிதர்சனம்.

தேடலும் கற்றலும்
2009-ம் ஆண்டின் பின்னரான ஆயுத மௌனிப்பின் பின்னர் தமிழர்கள் அதிகளவில் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி தமது கவனத்தை திருப்பி இருந்தாலும், ஐக்கிய நாடுகள் சபை பற்றியும், அதன் செயற்பாடுகள் மற்றும் பொறிமுறைகள் தொடர்பிலும் ஆராய தவறி விட்டனர். ஜெனீவாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் பேரவை தொடர்பான பல விடயங்கள் அதன் இணையதளத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும். ஒரு வருடத்தில் மூன்று முறை நடைபெறும் கூட்டத்தொடர்கள் விபரங்கள் உட்பட அதன் அங்கத்துவ நாடுகள், மனித உரிமைகள் பேரவை துணை அமைப்புகள், நாடுகள் தொடர்பான மதிப்பாய்வுகள், ஆலோசனை குழு கூட்டங்கள் மற்றும் புகார் நடைமுறை போன்ற விபரங்களை அதன் இணையத் தளத்தில் பார்வையிட முடியும். மனித உரிமை பேரவை நிகழ்ச்சி நிரல் தொடர்பான விடயங்களை Extranet‘ என்னும் பகுதிக்குள் பார்வையிட முடியும். உங்களுடைய முழுப் பெயர் மற்றும் மின்னஞ்சல் விபரங்களை வழங்கினால் இந்த பகுதியின் கடவுச்சொல்லை உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்தப் பிரிவில் ஒவ்வொரு கூட்டத்தொடரின் பொதுவிவாதம் மற்றும் ஊடாடும் உரையாடல் போன்ற வாய்மொழி அறிக்கை நிகழ்ச்சி நிரல் , வரைவு தீர்மானங்கள், முடிவுகள் மற்றும் ஜனாதிபதியின் அறிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்றால் அதன் நோக்கம், செயற்பாடுகள் பற்றிய தெளிவு எமக்கு தேவை. தேடலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுமே எமக்கு பல விடயங்களை தெளிவுபடுத்தும். ஒரு விடயத்தை அதன் மூலப்பொருளில் இருந்து கற்றுக்கொள்வதே சிறப்பாகும். ஆனால் நம்மில் பலர் ஒரு சிலர் சொல்வதை கேட்டுக் கொண்டு அதனை கண்ணை மூடிக் கொண்டு நம்புவதை பார்க்கும் போது, அதுவும் படித்தவர்கள் அப்படி நடப்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.
திருவள்ளுவர் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்கிறார். அதாவது எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
அது போல தமிழர்களாகிய நாம் பல்துறை சார்ந்து எந்தெந்த வழிகள் எமக்கு உள்ளன என நினைக்கிறோமோ அந்தந்த வழிகளையெல்லாம் ஆராய்ந்து கற்று அலச வேண்டிய இடத்தில் இருக்கிறோம். தேடுங்கள் கிடைக்கும் என இயேசு நாதர் கூறியது போல தேட வேண்டும், பல நல்ல நூல்களை படித்து தெளிவடைய வேண்டும்.
இதனைத்தான் திருவள்ளுவர் தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு என்கிறார். அதாவது தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் என்பது இதன் பொருளாகும். சரியான தெளிவை நாம் பெறுமிடத்து, பயணிக்கும் பாதை சரியா தவறா என ஆராய்ந்தறிய முடியும்.

மனித உரிமை பேரவை

மனித உரிமை பேரவையானது ஐக்கிய நாடுகளின் அமைப்பின் ஒரு அங்கமாக செயற்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் 60/251 தீர்மானத்தின் அடிப்படையில் 15 மார்ச் 2006-ல் உருவாக்கப்பட்டு, 2006 ஜூன் 19 முதல் 30 வரை அதன் முதல் அமர்வு இடம் பெற்றது. உலகமெங்கிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதும், மனித உரிமை மீறல்களை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதும் , பதட்டமான சூழ்நிலைகளை நிவர்த்தி செய்வதும் ,வலுப்படுத்துவதும் அதன் பிரதான பொறுப்பாக அமைந்துள்ளது. வருடம் முழுவதும் மனித உரிமை பிரச்சனைகள் மற்றும் சூழ்நிலைகள் தொடர்பாக, பல விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் ஜெனிவாவில் உள்ள அலுவலகத்தில் நடத்துகிறது. இதில் தமிழர்கள் கலந்து கொண்டு தமது விவாதங்களை முன் வைப்பதோடு, கலந்துரையாடல்களிலும் பங்குகொள்ள முடியும். அது மட்டுமல்ல 2007-ம் ஆண்டு „Institution-building package“- என அழைக்கப்படும் ஒரு கையேடு ஒன்றையும் மனித உரிமை பேரவை வெளியிட்டுள்ளது. இந்த கையேட்டினை அதன் இணையதளத்தில் எல்லோருமே பார்வையிட முடியும். இதனை வாசிப்பதன் ஊடாக மனித உரிமைபேரவையின் பல நடைமுறைகள் மற்றும் அதன் வழிமுறைகளை மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளமுடியும். பொதுவான/ உலகளாவிய கால மதிப்பாய்வு பொறிமுறை (Universal Periodic review Mechanism) கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்கள் (Principles and objectives) மதிப்பாய்வின் காலம் மற்றும் ஒழுங்கு முறை (Periodicity and order of the review) மற்றும் செயல்முறைகள் உட்பட, சிறப்பு நடைமுறைகள் (Special Procedures)தொடர்பில் மிகவும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. Special Procedures பிரிவில் தான் சில நாடுகளில் நடைபெறும் குறிப்பிட்ட மனித உரிமை சார்ந்த பிரச்சனைகள் மற்றும் சூழ்நிலைகளை ஆராய்ந்து, ஆலோசனைகளை வழங்கவும், கண்காணிக்கவும், மற்றும் பகிரங்க அறிக்கை சமர்ப்பிக்கும் முகமாக சிறப்பு அறிக்கையாளர்கள், சிறப்பு பிரதிநிதிகள், சுயாதீன வல்லுநர்கள் போன்றவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த பேரவை இந்த வருடம் தனது பதினைந்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .பதினான்கு ஆண்டு காலம் அதன் இணையத்தளத்தில் உள்ள தகவல்களை அதாவது தமிழருக்கான நீதி நோக்கிய பாதையில் பயணிக்கும் பலர் இதுவரை சென்று பார்க்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமே. மனித உரிமை பேரவை செயல்முறை தொடர்பில் ஒருவரும் சொல்லித் தரவில்லை என்கிற குற்றச்சாட்டு எனது காதுகளில் விழுந்தமையாலேயே இதனை இங்கு குறிப்பிடுகிறேன்.
சரியான தெளிவை தேடி பெற்றுக்கொள்ளாமல் பயணிக்கும் நாம் அப்படியென்ன சாதித்து விடப்போகிறோம்?
மேலும் மனித உரிமை பேரவை ஆலோசனைகுழு எவ்வாறு தெரிவு செய்யப் படுகிறது என்பது தொடக்கம் , அதன் வேலைத்திட்டங்கள் செயட்பாடுகள் உட்பட தெளிவாக அனைவரும் எளிதாக புரிந்து கொள்ள கூடிய வகையில் இந்த கையேட்டில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது மனித உரிமை சார்ந்து போராடும் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய புகார் நடைமுறை Complaint Procedure-தொடர்பாக கூட விரிவான முறையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இவற்றை அறிந்து கொள்ளுமிடத்து, மனித உரிமை சபையின் அவசியம் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.