மத குருமாருக்கு சம்பள வெட்டு – போப் பிரான்சிஸ் உத்தரவு
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பெரும்பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அந்தவகையில் கத்தோலிக்க தலைமையிடமாக இருக்கும் வத்திக்கான் நகரும் பாதிக்கப்பட்டுள்ளது.வத்திக்கானில் புனித தலங்கள் அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் இந்த ஆண்டு 50 மில்லியன் யூரோக்கள் வருமான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வருமான இழப்பு காரணமாக கார்டினல்கள் மற்றும் பிற மதகுருக்களுக்கு சம்பள வெட்டுக்களை போப் பிரான்சிஸ் உத்தரவிட்டார்.
கார்டினல்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்து அவர்களின் ஊதியம் 10% குறைக்கப்படும் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. அவர்கள் தற்போது மாதம் €5,000 (£4,300; $5,900) யூரோக்கள் வரையில் மாதச்சம்பளம் பெறுகின்றனர் என தகவல்கள் கூறுகின்றன. மத குருக்களுக்கு 3 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையில் சம்பள குறைப்பு செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் நிதி நெருக்கடி காரணமாக வேலை இழப்புகள் செய்யப்பட மாட்டாது என போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.