200 மில்லியன் தடுப்பூசி செலுத்துவதே இலக்கு – ஜோ பைடன் பேட்டி
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
கொரோனா தொற்று காலத்திற்கு இடையில் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடந்து முடிந்தது. அதிபராக பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் ஜோ பைடன் தீவிரப்படுத்தியுள்ளார்.
தனது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பை இதுவரை நடத்தவில்லை. டிரம்ப் உள்பட இதற்கு முன் அமெரிக்க அதிபராக பதவியேற்றவர்கள் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள்ளாக செய்தியாளர்களை சந்திப்பை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் மார்ச் 25-ம் தேதி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முதல் செய்தியாளர் சந்திப்பு வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், முதல் 100 நாளில் 200 மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்துவதே தனது அரசின் இலக்கு என தெரிவித்தார்.
எனது அரசின் இலக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளேன். உலகில் உள்ள வேறு எந்த நாடும் நமது இலக்கின் அருகில் வரமுடியாது என்பதை அறிவேன்.
100 நாட்களில் 200 மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்துவது என்பது மிகவும் சவாலான பணி. ஆனால் நம்மால் முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி என 3 நிறுவனங்களின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்கர்கள் அனைவருக்கும் மே மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.