புலம்பெயர் தமிழர்களுக்கு கழுத்தறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த பிரியங்க பெர்னாண்டோ- பிரித்தானிய நீதிமன்றின் உத்தரவு!
பிரித்தானியாவுக்கான ஸ்ரீலங்கா தூதுவரான முன்னாள் பிரதானி மேஜர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரித்தானிய உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
2018 ஆம் ஆண்டு லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடத்திய போது கழுத்தை அறுப்பதாக பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் காட்டி உயிர் அச்சுறுத்தல் விடுத்திருந்தமையானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்து பிரியங்க பெர்னாண்டோவை குற்றவாளியாக பிரித்தானிய நீதிமன்றம் அறிவித்தது.
அத்துடன், அவருக்கு 2400 பவுண்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டது. குறித்த அபராத தொகையை பிரியங்க பெர்னாண்டோ செலுத்தாத நிலையில் அவரை உடனடியாக கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் அவரை கைதுசெய்ய முடியாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.