கருவுற்றிருந்த காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி!
கருவுற்றிருந்த காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் உடலில் இயற்கையாகவே கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ உலகில் கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியுடன் குழந்தை பிறப்பது இதுதான் முதல் முறை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாட் ருட்னிக் ,போல் கில்பர்ட் ஆகியோர் தாக்கல் செய்த் அறிக்கையில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரைச் சேர்ந்த பெண்ணுக்கு இந்தக் குழந்தை பிறந்துள்ளது. இந்தப் பெண்ணுக்கு Moderna Covid-19 தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்படும்போது, அவர் 36 வாரங்கள், 3 நாட்கள் கர்ப்பிணியாக இருந்தார். தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட 3 வாரங்களில் அந்தப் பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த பெண் குழந்தை மிகவும் ஆரோக்கியமாகவும், நல்ல உடல் எடையிலும் இருந்தது. அந்தக் குழந்தையின் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து மருத்துவர்கள் ஆய்வு செய்தபோது, இயல்பாகவே ரத்தத்தில் கொரோனா வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் வியந்துள்ளனர்.
பேராசிரியர்கள் சாட் ருட்னிக், பால் கில்பர்ட் ஆகியோர் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையின் உடலில் கொரோனா வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக இருப்பது இதுதான் முதல் முறையாகும்.
இந்தக் குழந்தை பிறந்த 28 நாட்களுக்குப் பின் அந்தப் பெண்ணுக்கு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தப்பட்டது. இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட கர்ப்பிணிகளுக்குப் பிறந்த குழந்தைகள், கருமுட்டை ஆகியவற்றில் எதிர்பார்த்த அளவைவிட கொரோனா வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. ஆனால், இந்தக் குழந்தைக்கு மட்டுமே முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.
ஆதலால், கர்ப்ப காலத்திலேயே கொரோனா தடுப்பூசி போடுவதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் உடலில் இயல்பாகவே கொரோனா வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியுமா என்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முடிவுகளை அறிவதற்கு நீண்டகால ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
இருப்பினும், பிறக்கும் குழந்தைகள் இயல்பாகவே கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறக்க பெண்கள் கருவுற்று இருக்கும் காலத்திலேயே கொரோனா தடுப்பூசி போடுவது சரியானதுதானா என்பதை நிரூபிக்க இன்னும் போதுமான சான்றுகள் இல்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படுவது அவசியம்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுதல் குறித்த பதிவேடு, பிறக்கும் குழந்தையின் உடலில் இருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை குறித்து பதிவேட்டைப் பராமரிக்க சக ஆய்வாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்‘ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.