November 25, 2024

மணியின் கதிரை முடிவு:மார்ச்31!

யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட ஆறுபேரை  கட்சியில் இருந்து நீக்கிய விடயத்தின் குடியியல் மேன்முறையீட்டு மாகாண நீதிமன்றின் தீர்ப்பு எதிர்வரும்  31ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை முதல்வரான வி.மணிவண்ணன் உட்பட ஆறுபேரை ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கியதான அறிவித்தலை அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைத்திருந்தார். அவ்வாறு அனுப்பிய கடித்த்திற்கு அமைய 21 நாட்களிற்குள் உறுப்புறுரிமை இழந்தமை தொடர்பான அரச இதழ் பிரசுரிக்கப்படும் என தெரிவத்தாட்சி அலுவலர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட உறுப்பினர்களிற்கு அனுப்பி வைத்தார்.

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் கடிதம் அனுப்பிய ஆறு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் வி.மணிவண்ணன் உட்பட நால்வர்  யாழ்ப்பாணம் மாநகர சபை  உறுப்பினர்கள் என்பதோடு எஞ்சிய , இருவர் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்களாவர்.

ஆறு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் தெரிவத்தாட்சி அலுவலரின் இந்த முடிவிற்கு இடைக்காலத் தடைகோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தபோது  மாவட்ட நீதிமன்றம் இந்த ஆறு உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து நீக்கும் முடிவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.

மாவட்ட நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  சளார்பில் குடியியல் மேன்முறையீட்டு மாகாண நீதிமன்றில் தாக்கல் செய்த மனுக்களில் மயூரன் மற்றும்  வி.மணிவண்ணனிற்கு எதிரான மனு மீதான விசாரணைகள்  நிறைவுற்றுள்ளது.

வழக்கிற்கான தீர்ப்பு 31ஆம் திகதியிடப்பட்டதோடு எஞ்சிய நால்வரினது வழக்குகளும் எதிர்வரும் 24ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.