ஈசல்களாக படையெடுக்கும் கோத்தா தரப்புக்கள்?
எமது இராணுவம் தமிழ் மக்களை மனிதாபிமான முறையில் மீட்ட முறையை காணொளிப்பதிவொன்றின் ஊடாக சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியிருக்கின்றோம். இந்த யுத்தம் ஏனைய நாடுகளில் இடம் பெறும் யுத்தம் போன்று இடம் பெறவில்லை. மாறாக மனிதாபிமான நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டதென தெரிவித்துள்ளது தென்னிலங்கை தரப்பொன்று.
கோத்தபாய ஆட்சியில் மீண்டும் போராட்டம் நடத்தும் சிறுகுழுக்கள் முனைப்பு பெற்றுள்ள நிலையில் ஜெனீவா மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வீண்பழி சுமத்தப்பட்டுள்ளதாக கூறி இலங்கையர்களின் சர்வதேச மக்கள் அமைப்பினால்(? ) ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிவழி ஆர்பாட்டமொன்;று இடம் பெற்றது.
இந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான காரியாலயம் மற்றும் சுவிஸ் தூதரகங்கம் என்பவற்றிற்கு முன்பாக இடம் பெற்றது.
இதில் பௌத்த மத தலைவர்கள் உள்ளடங்கலாக 25 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது ஆர்பாட்டகாரர்கள் ஒரேநாட்டில் ஒரே சட்டம் , இலங்கை பலம் பொருந்திய நாடுகளின் விளையாட்டு மைதானம் அல்ல ,எங்கள் நாடு , எங்கள் விருப்பம் ,பிரிவினைவாதத்தை நிறுத்துங்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை கையில் ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன் போது ஆர்பாட்டகார்களின் மத்தியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாஹியங்கல ஆனந்த சாகர தேரர்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எமது நாட்டில் மனிதவுரிமை மீறல் இடம் பெற்றுள்ளதான குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. அதன் ஊடாக எமது நாட்டை அடிபணிய வைக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றுகின்றன.
எமது நாட்டில் பயங்கரவாதிகளுக்கிடையிலான பாரிய யுத்தமே இடம் பெற்றது. அதில் தமிழ் சிங்கள முஸ்லீம் என்ற பேதம் இருக்கவில்லை. அனைவருடைய சுதந்திரத்திற்காகவுமே இலங்கை இராணுவம் போராடியது. அதுவும் மனிதாபிமான செயற்பாடாகவே இந்த நடவடிக்கை நாட்டினுள் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கு எதிரான சர்வதேச சக்திகள் எமது நாட்டின் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றன என விளக்கமளித்துமுள்ளது..