November 25, 2024

தடை தாண்டி சந்தித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பதனை தடுத்து நிறுத்த இலங்கை அரசு கொழும்பிலுள்ள துர்தரகம் ஊடாக முயன்ற போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது.

நேற்று புதன்கிழமை (24) மாலை கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதில் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பிலும், அதனால் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மனக்கவலைகள் குறித்தும் அவர்கள் பிரதமர் இம்ரானிடம் எடுத்துரைத்தனர். அத்துடன், முஸ்லிம் சமூகத்தின் சமகால நெருக்குதல்கள் குறித்தும் அவர்கள் பிரதமர் இம்ரான் கானுக்கு தெளிவுபடுத்தினர்.

இதற்கமைய ஜனாஸா அடக்கம் தொடர்பில் தான் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசியதாகவும் விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் எனவும் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்ததாக முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், ஹலீம், ஹாபிஸ் நஸீர் அஹமட், தௌபீக், ஹரீஸ், அலி சப்ரி ரஹீம், முசாரப், இசாக் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், ஹலீம், உட்பட முஸ்லிம் எம்.பிக்கள் பலர் கலந்துகொண்டதாக தெரியவருகின்றது.