அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நெஞ்சுரத்தோடு போராடும் ஈழச்சொந்தங்களை போற்றுகிறேன்!
சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி நடைபெறுகிற ஈழச்சொந்தங்களின் தொடர்ப்போராட்டம் வெற்றிபெறட்டும் என நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கேட்டு கிளிநொச்சி கந்தசாமி கோயில் முற்றத்தில் நடைபெற்று வரும் பட்டினிப்போராட்டமும், பொத்துவிலிலிந்து தொடங்கியிருக்கும் நடைப்பயணமும் நம்பிக்கையைத் தருகிறது. சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்களின் கோர அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நெஞ்சுரத்தோடு போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் ஈழச்சொந்தங்களைப் பெரிதும் போற்றுகிறேன்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாயக விடுதலைக்காகவும், தங்களது மண்ணுரிமைக்காகவும் போராடிய தமிழ் மக்கள் மீது, இனவெறியும், இனத்துவேசமும் கொண்டு, பல்வேறு அடக்குமுறைகளை ஏவி, அரச பயங்கரவாதத்தின் மூலமும், உள்நாட்டுப்போர் மூலமும் 2 இலட்சம் தமிழர்களைத் துள்ளத்துடிக்கப் படுகொலை செய்தது இலங்கை இனவெறி அரசு. இனப்படுகொலை நிகழ்ந்து பத்தாண்டுகளாகியும் அதுகுறித்து எவ்விதப் பன்னாட்டு விசாரணையும் நடத்தப்படாத நிலையில் அதற்கான நீதியைக் கேட்டு நிற்கிறோம். அனைத்துலக நாடுகளும் கைவிட்ட கையறு நிலையிலும் சர்வதேசச் சமூகத்திடம் மன்றாடி வருகிறோம். அதேபோல, சிங்களப் பேரினவாத அரசால் விசாரணை என்ற பெயரில் திட்டமிட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அவர்களது உறவினர்கள் கடந்த பத்தாண்டுகளாகப் பல்வேறு தொடர்ப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், முறையான பதில்கூட அளிக்கப்படாமல் அவர்கள் தொடர்ந்து சிங்கள இனவாத அரசால் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழர்களின் போராட்டங்களுக்குச் செவிசாய்க்காத பேரினவாத அரசு இனவழிப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளதை அண்மைக்காலமாக ஈழத்தில் நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களை முழுக்க இராணுவமயமாக்குவது, தமிழர் காணிகளை ஆக்கிரமிப்பது, புதிய சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி, பூர்வக்குடிகளான தமிழர்களின் இருப்பைக் குறைப்பது, இருநூறுக்கும் மேற்பட்ட தமிழர் வழிபாட்டுத் தலங்களைச் சிதைத்தழிக்க முயல்வது, புத்த விகார்களைப் புதிதாக நிறுவுவது, தமிழ் மக்களின் இன, மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கான வரலாற்று அடையாளங்களை முற்றலுமாக அழிப்பது என மறைமுகமாகவும், நேரடியாகவும் இனவழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், இசுலாமிய மக்களின் பாரம்பரிய சமயச் சடங்கான இறந்தவர்களைப் புதைக்கும் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்து, உடல்களை எரியூட்டி வருவதுடன், அதற்கு எதிராகப் போராடும் இசுலாமியர்களை அடக்கி ஒடுக்குவது, விசாரணை ஏதுமின்றி அரசியல் கைதிகளாகச் சிறைகளிலுள்ள தமிழர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்க மறுத்து சிங்களக் கைதிகளை மட்டும் விடுவிப்பது, மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் பேச்சுரிமை, எழுத்துரிமையைப் பறிப்பதெனப் பல்வேறு தொடர் இனவெறித் தாக்குதல்களை ஒவ்வொரு நாளும் நடத்திக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
எத்தகைய அடக்குமுறைகளை ஏவினாலும், இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தமிழர்களின் உரிமைப்போராட்டம் தமக்கான நீதியைப் பெறும்வரை ஒருநாளும் ஓயப்போவதில்லை என்பதை உணர்த்தும்விதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதையப் போராட்டங்கள் சிங்கள ஆட்சியாளர்களைக் கலக்கத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது. அதனை நிறுவுகின்ற வகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் நிலை என்ன ஆனது? அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? அல்லது கொல்லப்பட்டார்களா ? அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் என்ன ? என்பது குறித்த உண்மை நிலையை அறியச் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடைபெற வேண்டியும், இன்னும் சிறையில் வாடும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியும், இனவழிப்பு தொடர் நடவடிக்கைகளைப் பன்னாட்டுச் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்று நீதியை பெறும் நோக்கிலும், கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றலில் சுழற்சி முறையிலான பட்டினிப்போராட்டமும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்துப் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை நடைப்பயணமும் தொடங்கப்பெற்றுள்ளதை அறிந்தேன். இலங்கை சுதந்திர நாளினை, கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்ககளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அவர்களது உறவுகளால் தொடங்கப்பட்டுள்ள நீதிக்கான இப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். போராட்டம் வெற்றியை நிலைநாட்டவும், கோரிக்கைகள் நிறைவேற்றம் செய்யப்படவும் எமது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புரட்சி எப்போதும் வெல்லும்!
நாளைய வரலாறு அதனைச் சொல்லும்!