November 25, 2024

இளைஞரணிக்கு மகனை அழைக்கும் தொண்டர்கள், வாயடைத்துப்போன வைகோ!

 

மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோவின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (பிப்ரவரி 3) அண்ணா நினைவுநாளன்று தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது.கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்கள் நேரில் பங்கேற்கும் கூட்டமாக அமைந்தது. தேர்தல் நேரத்தில் கூட்டம் நடைபெறுவதால் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படும், கூட்டணி நிலவரம் என்ன என இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதேநேரம் கடந்த ஏப்ரல் மாதம் முதலே கட்சியில் பரவலாக எழுந்த ஒரு கருத்தை கிட்டத்தட்ட அனைத்து மாவட்டச் செயலாளர்களும் எதிரொலிக்கும் கூட்டமாக அமைந்துவிட்டது நேற்றைய கூட்டம். அதுதான் வைகோவின் மகன் துரை வையாபுரி என்கிற துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை.

2020 ஏப்ரல் மாதம் 2ம் தேதி மின்னம்பலத்தில், ‘சட்டமன்றத்தை நோக்கி வைகோ மகன்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், ‘ ஏப்ரல் 2 ஆம் தேதி வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பிறந்தநாள். அதை ஒட்டி கட்சியின் பெரும்பாலான மாசெக்கள் துரையைத் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். சமூக தளங்களில் துரைக்கு வாழ்த்து சொல்லி மாசெக்கள் பதிவிட்டதை எல்லாம் வைகோ கூர்ந்து கவனித்து வருகிறார். தன் மகனின் அரசியல் வருகை பற்றி வைகோ இதுவரை கட்சி அளவில் வெளிப்படையாக பேசியதில்லை. ஆனால் திருமண நிகழ்வுகளுக்கு தனக்கு பதிலாக அனுப்பி வைப்பதே ஒரு மெசேஜ்தானே’ என்று அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் அடுத்த 12 நாட்களில் ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி வைகோ தனது அண்ணாநகர் இல்லத்திலேயே அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கலந்துகொண்டார். அதோடு வைகோவின் மகன் துரை வைகோவும், தன் தந்தைக்கு அருகிலேயே நிற்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. வைகோ தன் மகனை ஓர் அரசியல் ரீதியான நிகழ்வில் தன்னோடு நிற்க வைத்து புகைப்படம் வெளியிடுவது இதுதான் முதல் முறை. அப்போது மின்னம்பலத்தில் இதுகுறித்து செய்தி வெளியாக, நம்மைத் தொடர்புகொண்ட வைகோவே நேரடியாக, ‘அரசியலுக்கு வருவதில் என் மகனுக்கும் ஆர்வமில்லை. எனக்கும் அதுபோன்ற நோக்கமில்லை’ என்று தெரிவித்தார்.

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடையப் போகிற நிலையில் 2021 பிப்ரவரி 3 ஆம் தேதி மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக மதிமுகவின் திருப்பூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சிவபாலனை நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் வைகோ. அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேரத் தயாராகிவிட்டார் என்ற தகவலை அறிந்துதான் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டார் வைகோ.

தொடக்க உரையாற்றிய வைகோ, திருப்பூர் சிவபாலனைப் பற்றிச் சொல்லித்தான் ஆரம்பித்தார். “நான் உங்களுக்காகத்தான் உழைக்கிறேன். ஆனால் இப்படி சிலர் செல்லும்போது மனது வேதனைப்படுகிறது. நீங்களும் கடுமையாக உழைக்கிறீர்கள். ஆனால் சிலர் இப்படி சலனப்படுகிறார்கள். அதனால்தான் காலையிலேயே அந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்தேன்”என்றவர், “சில பேர் என்னிடமே உங்கள் பையனை கொண்டுவாருங்கள் என்கிறார்கள். அவன் வரமாட்டான். உறுதியாக வரமாட்டான். தாயகம் பக்கம்வரமாட்டான்” என்று பேசினார்.

வைகோ பேசி முடித்ததும், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஆடுதுறை முருகன் ஆரம்பித்தார்.

”தலைவரே…நீங்கள் என்னை ஏசினாலும் பரவாயில்லை. கண்டித்தாலும் பரவாயில்லை. துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும். அவர் வந்தால்தான் நம் கட்சிக்கு இளைஞர்கள் வருவார்கள். நம் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. பெரும்பாலானோருக்கு 60 வயதுக்கு மேலானவர்களாகதான் இருக்கிறோம். கட்சிக்கு இளைஞர்கள் வரவேண்டும் என்றால் துரை போன்றவர்கள் கட்சிக்கு வரவேண்டும்” என்று கூற அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஒட்டுமொத்தமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். வைகோ பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.

மதுரை பூமிநாதன், “தம்பி வரணும். அன்னிக்கு மதுரை வந்தாரு. மதுரையே அல்லோலகல்லோலப்பட்டுது” என்றார். இதேபோல குமரி மாவட்டச் செயலாளரும் துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆதரித்தார்.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா பேசும்போது, “ இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அப்போது என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நான் உண்மையாக இருப்பேன் என்று கூறினேன். அதன்படி நடந்தேன். நீங்கள் எனக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அப்போதும் நான் உங்களுக்கு விசுவாசமாகவே இருப்பேன் என்று உறுதியளித்தேன். இப்போதும் அதையே சொல்கிறேன்… துரை வையாபுரி தொடர்பாக பாண்டியநாடு, சோழநாடு, சேர நாடுகள் கருத்தையே பல்லவநாடும் முன் வைக்கிறது. பல்லவநாடும் ஆதரிக்கிறது” என்று தனது பல்லவ பகுதியின் ஆதரவையும் துரை வைகோவுக்கு மல்லை சத்யா தெரிவிக்க அரங்கத்தில் மீண்டும் கைதட்டல் எழுந்தது.

அரசியல் ஆய்வு மையக் குழுச்செயலாளர் செந்திலதிபன், “தம்பியை வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வையுங்கள். அவர் சட்டமன்றத்துக்கு வரட்டும். அவர் ராமேஸ்வரத்துக்குச் செல்கிறார், 50 கார்கள் பின்னால் போகின்றன. புதுப் புது இளைஞர்கள் எல்லாம் வருகிறார்கள். ‘இது வைகோ பையனா… வைகோ பையனா?’ என்று கேட்கிறார்கள். அண்மையில் அடையாறு புற்று நோய் மைய நிறுவனர் டாக்டர் சாந்தா மறைவின் போது கடைசி வரை துரை இருந்து பார்த்துக் கொண்டார். இப்படிப்பட்ட பண்பு நலன்கள் மிக்க துரையை அரசியலுக்கு வர நீங்கள் தடுக்கக் கூடாது” என்று பேசினார்.

துணைப்பொதுச் செய்லாளர் ஏ.கே.மணி பேசுகையில், “போன முறை காணொலி மாசெக்கள் கூட்டத்திலேயே துரை கட்சிக்குள் வரவேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டபோது தலைவர் கண்டித்தார். இப்போது கூட துரை தாயகத்துக்கு வரமாட்டார் என்று சொல்கிறீர்கள். தலைவரே… அவர் தாயகத்துக்குத்தானே வரக் கூடாது. துரைக்கு இளைஞரணிச் செயலாளர் பதவியைக் கொடுங்கள். இளைஞரணிக்காக தனி அலுவலகத்தைக் கட்டித் தரவும் தயாராகவும் இருக்கிறோம்” என்று பேசினார்.

இதையெல்லாம் தாடையில் விரல் தாங்கிப் பிடிக்க பார்த்துக் கொண்டே இருந்த வைகோ நிறைவுரையாற்றுகையில், “இந்த விவகாரத்துல நான் இனி பேசமாட்டேன்யா…”என்று சொல்லிவிட்டார். அதாவது நான் தடுக்க மாட்டேன் என்று அவர் சொன்னதாகச் சொல்லும் மாசெக்கள், “துரை வைகோ மதிமுகவின் இளைஞரணிச் செயலாளராக விரைவில் நியமிக்கப்படுவார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்”என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

-ராகவேந்திரா ஆரா