இராணுவமயமாக மாறும் இலங்கை யஸ்மின் சூக்கா கடும் கண்டனம்!!
இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவ மயமாக்கல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆடசியில் இடம்பெறுகின்றது.
இதனால் இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆகியன கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“பெரும் எண்ணிக்கையான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இலங்கையில் சிவில் சேவையில் பதவிகளைப் பொறுப்பெடுத்து வருகின்றனர்.
முன்னாள் இராணுவ அதிகாரியான ஜனாதிபதி கோட்டடாபய ராஜபக்சவாலேயே அண்மையில் 39 இராணுவ அதிகாரிகளுக்கு முக்கிய அரச பதவிகள் வழங்கப்பட்டன.
இதனைவிட ஜனாதிபதியின் கைகளை அதிகார மயமாக்கல், உறவினர் ஆதரவுக் கொள்கை, நண்பர்களுக்கு அதிகாரம் வாய்ந்த பதவிகளை வழங்குதல் மற்றும் நீதிமன்ற வழக்குகள் எதிராக அப்போதும் இருக்கையில் அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கையிலான ஆட்களை அரச பதவிகளுக்கு நியமித்தல் போன்றனவும் இடம்பெறுகின்றன. இது ஒரு திருட்டுத்தனமான சதிக்கு ஒப்பானதாகும். இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது.
விசுவசமான இராணுவ அதிகாரிகள் கொரோனாவுக்கான நடவடிக்கை, பொலிஸ், புலனாய்வு சேவைகள், சிறைகள், வெளிநாட்டுக் கொள்கை, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுங்கம், அடிப்படைத் தேவைச் சேவைகள், விவசாயம், மீன்பிடி, நில அபிவிருத்தி, வனப்பாதுகாப்பு மற்றும் இறுதியாக இலஞ்ச ஆணைக்குழு ஆகியவற்றில் அதிகாரத்தைச் செலுத்தி வருகின்றனர்.
இது முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவமயமாக்கல் ஆகும். ஓய்வுபெற்ற மற்றும் பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் நிர்வாகப் பதவிகள், கட்சிப் பதவிகள் மற்றும் முக்கிய அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளார்கள். இது அரசின் சிவில் குணமாச்சத்தின் முடிவைத் தீர்க்கமாகக் குறிக்கும்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் பொதுமக்களுக்கு எதிரான பயங்கரமான குற்றங்களைப் புரிந்ததாக இராணுவத்தினர் மீது சரமாரியான குற்றச்ச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களை அரசியல் மற்றும் நிர்வாகக் களங்களில் தமது அதிகாரத்தை வலுப்படுத்த அனுமதித்தல் மீளமுடியாத ஒரு நிலைக்கு வழிவகுக்கும்” – என்றுள்ளது.