ஐ.நாவின் ஈழத்தமிழர் விவகாரம் வலுச்சேர்க்க டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம்!
வருகின்ற மார்ச் மாதம் யெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் விவகாரம்
விவாதிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில், டென்மார்க்கை தலமாக கொண்டியங்கும் தமிழர் அமைப்பான DSTF கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
18.01.2021 அன்று டென்மார்க் தலைநகரில் இந்த கவனயீர்ப்பு வாகன பேரணி 12.30 மணிக்கு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலிருந்து இருந்து ஆரம்பித்து வாகனத்தொடரோடு டென்மார்க் நாடாளுமன்ற முன்றலை வந்தடைந்தது.
பின்பு டென்மார்க் நாடாளுமன்ற முன்றலில் கூடிய டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள், ஈழவிடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட பொதுமக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தியதோடு தேசியத்தலைவரின் படங்கள், தேசியக்கொடி மற்றும் தமிழினப்படுகொலையை பறைசாற்றும் பதாகைகளையும் தாங்கிய வண்ணம் உணர்வெழுச்சியுடன் “COVID 19” சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்த வண்ணம் நாடாளுமன்றத்தில் இருந்து புறப்பட்டு டென்மார்க் வெளிநாட்டமைச்சை வந்தடைந்தனர்.
இங்கு இறுதி நிகழ்வுகள் இடம்பெற்று தமிழினப்படுகொலைக்கான ஆதாரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் டென்மார்க் வெளிநாட்டமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. வெளிநாட்டமைச்சரின் கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய கடசிகள் ,புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றிணைவு ஸ்ரீலங்கா அரசாங்கத்தினை நெருக்கடியான நிலையில் கொண்டுவந்திருப்பதை டென்மார்க் அரசு உணர்வதாகவும் ,அதனை உள்வாங்கி தங்களின் எதிர்கால நடவடிக்கைகள் ஈழத்தமிழர் நோக்கி அமையும் என அவரினால் தெரிவிக்கப்பட்டது.