கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வன்னியில் தொடரும் மழையால் நீர்மட்டம் அதிகரித்துவரும் நிலையில் இரணைமடு குளத்தின் வான்கதவுகள் இரண்டு இன்று திறக்கப்பட்டுள்ளன.
சம்பிரதாய நடைமுறைகளைத் தொடர்ந்து குளத்தின் இரண்டு கதவுகள் தலா 6 அங்குலம் அளவுக்கு திறக்கப்பட்டுள்ளன.
36 கொள்ளளவைக் கொண்ட குளத்தின் நீர்மட்டம் தற்போது 34 அடியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரணைமடுக் குளத்தின் கனகராயன் ஆற்றுப் படுக்கையில் உள்ள முரசுமோட்டை, கண்டாவளை, புளியம்பொக்கணை, ஊரியான், சிவபுரம், நாகேந்திரபுரம் உள்ளிட்ட தாழ் நில பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருவதால் கனகாம்பிகைக்குளம் குளத்தின் வான் பாயும் அளவு இன்று அதிகரித்து வருகிறது.
எனவே ஆனந்தபுரம், இரத்தினபுரம், பன்னங்கண்டி, மருதநகர், பரந்தன், உமையல்புரம் ஆகிய இடங்களில் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.