தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பக்கத்துணையாக அமெரிக்கா – தமிழ் தரப்புக்கும் அழைப்பு
ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமெரிக்காவின் யோசனை வரவேற்கத்தக்கது என புளொட்டின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, புதிய தீர்மானமொன்றே கொண்டுவர வேண்டும் என்றும், அது மேலும் வலுவானதாக இருக்க வேண்டும் என்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் கூட்டமைப்பின் ஊடப்பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனிடத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதனை வரவேற்று கருத்து வெளியிடும் போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அணுசரணையுடன் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கடந்த அரசாங்கத்திற்கு இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதோடு புதிய அரசாங்கம் அத்தீர்மானத்திலிருந்து விலகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த அமர்வில் பிரித்தானியா முன்னின்று இந்த விடயங்களை கையாளவுள்ளது. எனினும் கடந்த காலத்தில் இலங்கை தொடர்பான பிரேரணைகளை தயாரித்து தீர்மானங்களை நிறைவேற்றிய அனுபவம் நிறைந்த அமெரிக்காவும் அதற்கு பக்கத்துணையாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுவதானது இலங்கையின் பொறுப்புக்கூறலை மேலும் அழுத்தமாக கூறுவதற்கும் சர்வதேசத்தின் மேற்பார்வையையும் பிடியையும் வலுவாக்குவதற்கும் ஏதுவானதாக அமையும்.
ஆகவே அவ்விதமான புதிய பிரேரணையொன்று தயாரிக்கப்படும் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போது நீதிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து வலுவானதொரு பிரேரணையை தயாரிப்பதற்குரிய முன்மொழிவுகளை ஏகோபித்து வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும்.
அதனைவிடுத்து தமிழ் தரப்புக்கள் இந்த விடயத்தினை தனித்தனியாக அரசியல் இலாபமடைவதற்காக கையாள முனைகின்றபோது இலங்கை அரசாங்கம் மிக இலகுவாக நழுவிக்கொள்ளும் நிலைமை ஏற்படும் ஆபத்துள்ளது.
ஆகவே இந்தத் தருணத்தினை சரியாக புரிந்துகொண்டு அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பதோடு அதற்குரிய முன்நடவடிக்கைகளையும்மேற்கொள்வதற்கு தயாராகவே உள்ளேன் என்றார்.