கண்ணதாசனிற்கும் கொரோனா?
தென்னிலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடையே கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசனிற்கு கொரோனா தொற்று இன்றைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்று உத்தரவிட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனால் மகசீன் சிறையில் அவருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய 45தமிழ் அரசியல் கைதிகளது நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனிடையே தமிழ் அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறைச்சாலைகளில் காலத்தைக் கழிக்கின்ற தமிழ்க் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுவித்தால் அதை நாம் எதிர்க்க மாட்டோம். என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
“அரசியல் பழிவாங்கல் காரணமாக நானும் சிறையில் சில காலத்தைக் கழித்தேன். அவ்வேளையில் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பலருடன் நேரில் பேசியிருக்கின்றேன். அவர்கள் தங்கள் துயரங்களை நேரில் என்னுடன் பகிர்ந்தார்கள். அவர்களில் சிலர் 15 வருடங்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
குற்றம் செய்தார்களோ இல்லையோ அவர்கள் சிறைகளில் பல வருடங்கள் தண்டனைகளைப் பெற்று விட்டார்கள். எனவே, அப்படியானவர்களை அரசியல் தீர்மானம் எடுத்து ஜனாதிபதி விடுவித்தால் அதற்கு நாம் ஆட்சேபனை தெரிவிக்கமாட்டோம் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.