November 22, 2024

மாரி மழையும் தவளையும், வாய்ச்சவாலும் வரவு செலவும் (காலக்கண்ணாடி-13)

— அழகு குணசீலன் —

இலங்கையில் இது வரவு – செலவுத்திட்டக்காலம். கொழும்பு முதல் குக்கிராமங்கள் வரை பேசுபொருளாக உள்ள விடயம். நிதி வரவு, செலவுத்திட்ட போர்வையில் இடம்பெறுகின்ற அரசியல் வரவு-செலவு பாதீடாகவே இவற்றைக் கொள்ள வேண்டி உள்ளது.

மறு பக்கம் மழைக்காலம் ஆமைகளும், தவளைகளும் மற்றும் வல்லூறுகள், சில்லூறுகள் எல்லாம் இரவிரவாகக் கத்துவதால் நித்திரையற்ற இரவுகள். இறுதியாக எல்லாம் புஸ்வாணம். தமிழ் மக்கள் இந்தக் கூட்டத்தை இதற்காகவா? பாராளுமன்றம் அனுப்பினார்கள்?

மத்திய பாதீட்டில் எம்.பி.க்கள் தங்கள் தூண்டிலைப் போட , பிரதேச பாதீட்டில் உறுப்பினர்கள் தங்கள் தூண்டிலைப் போடுகின்றனர். தூண்டிலில் தொங்கும் இரை மக்கள் கவ்விக்கொள்வதற்கு வசதியாக சோடிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினையை கட்சி அரசியலாக்கல், ஜதார்த்த -நடைமுறைச்சாத்தியமற்ற விடயங்களைக்கோரல், கூட்டுக் கட்சிகளுக்கிடையிலான கழுத்தறுப்பு, தேவையான விடயத்தைப் பேசாது, அலுத்தும், புளித்தும் போனவிடயங்களை மீண்டும், மீண்டும் உரக்கக் கூவி மக்களின் பிரச்சினையை திசைதிருப்புதல், இப்படி இரைகள் பலவிதம்.

இந்த பாதீட்டுக்காலம் இருவகையான பாதீடுகளைக் காட்சிப்படுத்துகிறது. அவை …

1.உள்ளூராட்சி அரசியல் பாதீடு

2.பாராளுமன்ற அரசியல் பாதீடு.

1.     உள்ளூராட்சி அரசியல் பாதீடு 

இலங்கையில் உள்ளூராட்சி அமைப்புக்களின் வரவு-செலவு திட்டங்கள் சமர்ப்பிக்கப்படுகின்ற நடைமுறையில் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு கட்சி அரசியலும், அரசியல்வாதிகளின் தனிநபர் சார்ந்த விருப்பு வெறுப்புக்களும் தாண்டவம் ஆடுகின்ற போக்கு அதிகரித்து உள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மாத்திரமன்றி தேசியபாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தோல்வியடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பாதீட்டு கூட்டங்களில் கலந்து கொள்கின்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

இது கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டிய உள்ளூராட்சி அமைப்புக்களின் செயற்பாடுகளில் சந்தேகங்களை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும். நிதி வரவு-செலவு திட்டத்தில் கட்சி அரசியல் மயமாக்கம் ஒரு ஆரோக்கியமான அரசியல் அல்ல.

பதவியைத் தக்கவைப்பதற்கான அரசியல் இலாப நட்ட பாதீட்டை கணக்கில் கொண்டே காய்கள் நகர்த்தப்படுகின்றன. மட்டக்களப்பு மாநகர உதவி முதல்வர் திரு.சத்தியசீலன் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் இதற்கு மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது. கட்சி அரசியலுக்கும் அப்பால் நாம் மக்களுக்கு சேவை செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் என்கிறார் அவர்.

பல ஊடகங்கள் வெட்டியும், ஒட்டியும் செய்திகளை வெளியிடுவது போன்று இந்த நிலை ஈ.பி.டி.பி., ரி.எம்.வி.பி கட்சிகளின் ஆளுமையில் உள்ள பிரதேச சபைகளில் மட்டும் இல்லை. மாறாக இது, ஒரு பொதுவான கட்சி அரசியல் பிரச்சினை. வாகரை, வாழைச்சேனை, மட்டக்களப்பு மாநகர சபையும் இதற்கு விதிவிலக்கல்ல. வடக்கிலும் இதுதான் நிலைமை.

மட்டக்களப்பில் இரு கூட்டாளிக்கட்சிகள் தமது அரசியல் இலாப நட்டக் கணக்கை முன்னிலைப்படுத்தியதால் இந்த வினை வந்திருக்கிறது.

மட்டக்களப்பு மாநகரசபையை கைப்பற்றப் போகிறது ரொலோ? தமிழரசும், புலி ஆதரவு சக்திகளும் ஊடகங்களில் ரொலோவிற்கு எதிரான பதிவுகளை ஆரம்பித்து விட்டனர்.

இது வழமையான பாணி. தங்களுக்கு முட்டுக்கொடுக்காதவர்கள் மீது சேறு பூசும் புனித அரசியல். ரெலோவின் அரசியல் புதைகுழி தோண்டப்படுகிறது. தங்களின் புதைகுழி இன்னும் பிணவாடை நிறைந்தது என்பதை இவர்கள் அறிவார்களா?

2.     பாராளுமன்ற அரசியல் பாதீடு 

மத்திய அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்ட, உல்லாசப் பிரயாண அமைச்சு மீதான விவாதத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ள இன்றைய நிலையில் இந்த அரசியல் பாதீட்டு இடுகை இடம்பெறுகின்றது.

நான் இங்கு குறிப்பிடுகின்ற அரசியல் பாதீட்டில் சாணக்கியனின் உரைக்கு கிடைத்த வரவேற்பு (வரவு), அவரது உரைக்கு கிடைத்த மறைமுக, வெளிப்படை எதிர் கருத்து(செலவு).

அரசியல் வரவு – அரசியல் செலவு = அரசியல் பாதீட்டு தேறிய மீதி.

காட்சி 1: 

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபையின் நிதிப்பாதீடு சமர்ப்பிக்கப்பட்டபோது சாணக்கியன் பா.உ. அங்கு சமூகமளித்திருந்தார்.

அங்கு அவர் ஆற்றிய உரையில் வியாழேந்திரனின் கார்பெட் வீதி அபிவிருத்தியை கிண்டல் செய்ததுடன், நிலம் இருந்தால்தான் றோட்டுப் போடலாம், முதலில் நிலத்தைக் காப்பாற்றுங்கள் என்று மேய்ச்சல் தரைக்கும் , கார்பெட் றோட்டுக்கும் முடிச்சுப் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்ல நீங்கள் தமிழ்தாய்க்கு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் என்றும் கோரிக்கை விட்டார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தேசியப்பட்டியல் பா.உ கலையரசன், தனது பகுதிக்கு கார்பெட் வீதி அபிவிருத்தியில் அதிக கிலோமீற்றர்கள் தேவை என கேட்டிருந்தார்.

1.     மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து சாணக்கியன் எம்.பியின் அக்கறை தமிழ்மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்தியது. இது வெறுமனே மக்கள் மத்தியில் கூறப்பட்ட ஒரு கருத்து மட்டுமே. இதனால் மேய்ச்சல் தரை விவகாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.(+) 

2.     இங்கு சற்று நாகரிகமற்ற வகையில் மட்டக்களப்பு அம்பாறை அரசுதரப்பு அரசியல்வாதிகளின் பிறப்பு குறித்து அவர் எழுப்பிய கேள்வி ஒரு அருவருக்கத்தக்க அரசியல் மட்டுமன்றி, தனது நிலையை மறந்து பேசிய உசுப்பேத்தல் பேச்சாகவும் அது அமைந்தது. ஒரு பிரிவினர் வாயில் கையைவைக்க இன்னொருபிரிவினர் கரகோஷம் செய்தார்கள்.(+/-)

3.     கார்பெட் வீதி விவகாரத்தில் சாணக்கியன் அவசரம் காட்டிவிட்டார். உண்மையில் அம்பாறை மாவட்டத்தின் தமிழ்க்கிராமங்களின் அடிப்படை நிர்மாணக் கட்டமைப்பு அழிந்து, தூர்ந்து கிடக்கின்ற நிலையில் வீதி அபிவிருத்தி அவசியமற்றது என்ற அவரது கருத்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை மூடி மறைத்து வெறும் கட்சி அரசியலை முதன்மைப்படுத்துவாக உள்ளது. (-)

4.     இந்தக் கருத்து அவருக்கு ஒரு மைனஸ். தேர்தல் காலத்தில் அபிவிருத்தியும், உரிமைமையும் என்ற அவரது  பிரச்சாரத்திற்கு முரணானது (-)

5.     கார்பெட் வீதி விடயமாக கலையரசன் எம்.பி. யின் கோரிக்கையோடு சாணக்கியன் கருத்து முரண்படுகிறது. அம்பாறை மாவட்ட பா.உ. என்ற வகையில் தனது மக்களின் தேவைகள் எவை என்பது கலையரசன் அறியாததல்ல.(-)

காட்சி 2: 

உல்லாசப் பிரயாண அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பேசிய சாணக்கியன் வடக்கு, கிழக்கில் உல்லாசப்பிரயாணத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

குறிப்பாக மட்டக்களப்பு வாவி வளம், சிறிய முதலீட்டாளர்களின் ஊக்குவிப்பு, விமான, புகையிரத போக்குவரத்து உட்பட பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார். உண்மையில் துறைசார்ந்த வளம்களை அடையாளம் கண்ட உரை.

அடுத்து முஸ்லீம்களின் கொரோனா தொற்று ஜனஸாக்கள் எரிக்கப்படுவது குறித்த அவரின் உரை. இது சிங்கள அரசியல் வாதிகளுக்கு  மட்டுமல்ல, முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கும் திருப்தி அளிப்பதாக இல்லை.

இருபதாவது திருத்தத்திற்கு ஒருவர் தவிர மற்றையவர்கள் ஆதரவளித்தீர்களே என்று பின்வரிசைக்கு திரும்பி கேள்வி எழுப்புகிறார் சாணக்கியன்.

1.     உல்லாசப்பிரயாண அபிவிருத்தி தொடர்பான உரை தகவல்களைச் சேகரித்து விபரமாக ஆற்றப்பட்ட ஒன்று. நிலாவெளி, திருகோணமலை மற்றும் அறுகம்குடாவும் உள்ளடக்கப்பட்டிருந்தால் இன்னும் முழுமை பெற்றிருக்கும் (+)

2.     சாதாரண முஸ்லீம் மக்களின் இதயத்தை தொட்ட எரியும் நெருப்பாய் சுவாலை விட்ட பேச்சு. தங்கள் உள்ளக் குமுறலை பாராளுமன்றத்தில் உரத்து ஒலிக்க எவரும் இல்லையா? என்று ஏங்கிய அவர்களின் இதயங்களுக்கு ஆறுதல்படுத்தும் ஒத்தடமாக இது அமைந்துள்ளது.(+)

3.     இந்த உரை முஸ்லீம் எம்.பிக்களை வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது. உங்களில் ஒருவரைத் தவிர அனைவரும்  20க்கு வாக்களித்தீர்களே இதற்குத்தானா? பின் வரிசை முஸ்லீம் எம்.பி.க்களை தேடுகிறார் சாணக்கியன். நிச்சயமாக முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு இது பிடித்திருக்காது. முஸ்லீம் மக்கள் சாணக்கியன் பக்கம், முஸ்லீம் அரசியல்வாதிகள் மக்களிடம் முகமிழந்து நிற்கிறார்கள். (+/-)

காட்சி 3: 

சாணக்கியன் முஸ்லீம்களுக்காக பேச, இஷாக் ரஹ்மான் எம்.பி. முஸ்லீம்கள் ஈழம் கேட்கவில்லை, நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை,,, ஜனாஸாவை எரிக்கக் கேட்கிறோம் என்று கூறுகிறார்.

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த இஷாக். தவறான அரசியல் சூழலில் கூறப்பட்ட  தவறான கருத்து. உண்மையில் இஷாக் இங்கு ஈழம் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழ் மக்களை ஆத்திரமூட்டுகிறது அவரது கருத்து.

1.     ஏற்கனவே சாணக்கியனின் முஸ்லீம்கள் மீதான ஆதரவு உரை குறித்து தமிழர்கள் மத்தியில் ஒரே கருத்து இல்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம்..(+/-)

2.     குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் அதிலும் கல்முனைப் பிரதேச தமிழர்கள், கிஸ்புல்லாவின் அரசியலில் கசப்பான அனுபவங்களைப் பெற்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள், சிங்கள அரசு எங்களை அழித்தபோது இந்த முஸ்லீம் தலைமைகள் எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.(-)

இவர்களுக்காக ஏன் தமிழ் எம்.பி. ஒருவர் பேச வேண்டும் என்று முஸ்லீம் இனவாத செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட ஒரு கணிசமான தமிழர்கள் கேட்கத்தவறவில்லை(.-)

3.     ஈழம் கேட்டால்/நாட்டைப் பிரித்துக் கேட்டால் ஒரு இனத்தை எரித்துவிடலாம் என்று இஷாக் நினைக்கிறாரா?. தாங்கள் கேட்கவில்லை என்பதால் தங்களை எரிக்கக் கூடாது என்கிறாரா? இவரைப் போன்று தமிழ், சிங்கள மற்றும் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத்தை ஜனாஸா எரிப்போடு தொடர்புபடுத்தியிருந்தால் மனிதத்தின் நிலை என்ன? சம்பந்தம் இல்லாமல் இஷாக் ஈழத்தை வம்புக்கு இழுத்திருப்பது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்ற அப்பட்டமான இனவாத வங்குரோத்து அரசியல். ஏற்கனவே சாணக்கியனின் ஜனாஸா குறித்து திருப்தியற்றிருந்த  தமிழர்களின் எண்ணத்தை இது உறுதிப்படுத்துகிறது(-)

காட்சி 4: 

காத்தான்குடியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடரில் தற்கொலை தாக்குதல் பயிற்சி பெற்ற 6 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பது. இக்காட்சி அனைத்து ஜனாஸா மனிதாபிமான அணுகுமுறைகளையும் தமிழர்கள் மத்தியில் பின் தள்ளி 21/4  கோரக்கொலைகளையும், அழிவுகளையும் உணர்ச்சிப் பிளம்பாக மீண்டும் நினைவலைகளைத் தூண்டி நிற்கின்றது.

1.     இதனால் ஒருபகுதி கிறிஸ்தவ மக்கள் மட்டுமன்றி, தமிழ் மக்களும் சாணக்கியனின் இந்த அணுகு முறையில் முழுமையான உடன்பாடு இல்லாதவர்களாக அல்லது திருப்தி அற்றவர்களாக உள்ளனர். நெருங்கிக் கொண்டிருக்கின்ற நத்தார், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சற்று முன் இக்கைதுகள் இடம்பெற்றிருப்பது மக்கள் மத்தியில். அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி இருக்கிறது.(-)

2.     21/4. நிகழ்வால் தமிழர்கள் நிலைதடுமாறி நின்ற நிலையில் இந்த முஸ்லீம் தலைமைகள் பயங்கரவாதிகளைப் பாதுகாப்பதிலும், அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்தது தப்பவைப்பதற்கும், தமக்கும் பயங்கரவாதிகளுக்கும் இருந்த தொடர்பு தடயங்களை அழிப்பதிலும் ஈடுபட்டார்கள் என தமிழ் தரப்பு சாணாக்கியனைப் பார்த்து கேட்கிறது. நீங்கள் அப்போது நல்லாட்சியோடு உறவில் இருந்தீர்கள் என்பதையும் அவர்கள் சாணக்கியனுக்கு நினைவூட்ட விரும்புகின்கிறார்கள்.(-)

காட்சி 5: 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் தேசியத்தின் மூத்தவர்கள் சாணக்கியன் செயற்பாடுகள் குறித்து அவதானித்து வருவதாகக் கதைகள் யாழ்குடாவிலும், வன்னியிலும் அடிபடுகின்றன.

இது தமிழரசுக்கு மட்டுமல்ல, விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றோருக்கும் ஒரு சவாலாக உள்ளது. சட்டவாதம் நடாத்தும் இவர்களுக்கு சட்டம் இன்றி பல துறைசார் விடயங்களிலும் சாணக்கியன் தலையைப்போடுவதால் தாம் பின் தள்ளப்படுகிறோம் என்று நினைப்பதாக தெரிகிறது.

1.     சாணக்கியன் தான் வளர்ந்த-வளர்த்து விடப்பட்ட ராஜபக்சே குடும்பத்தின் ஒரு செல்லப்பிள்ளையாகவே இன்னும் இருக்கிறார். அவர் பாராளுமன்றத்தில் உறுமினாலும், கர்ச்சித்தாலும் லொக்கு மஹாத்தயாக்களுடன் நல்லுறவு  பேணப்படுகிறது. இது தமிழரசுக்கு புளியைக் கரைக்கின்றன விடயம்.(-)

2.     இதன்மூலம் தமிழ் தரப்பிற்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காகவே சில வேளைகளில் அவர் வலிந்து  அரசிற்கு எதிராக பேசி, பின்வரிசை எம்.பி.க்களின் கூச்சத்தை சம்பாதிக்கிறார். தமிழ்தரப்பின் கவனத்தைத்  திருப்பும் தந்திர உபாயமா? என்ற கேள்வியும் எழுகிறது. (-)

3.     சந்திரகாந்தன் எம்.பி.க்கு எதிரான வழக்கில் சுமந்திரன் அஜரானதும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு ஆதரவாக கட்சிக் கொள்கைக்கு முரணாக செயற்பட்டதும்  மாவை குழுவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இச் சந்தர்ப்பத்தில் சாண்க்கியன் எம்.பி.யும், முதல்வர் மட்டு மேயர் சரவணபவானும் உடன் இருந்ததையும் அவர்கள் விரும்பவில்லையாம்.(-)

காட்சி :

பாராளுமன்றத்தில் பாதுகாப்புக்கு இலங்கையின் வரலாற்றில் அதிக நிதி ஒதுக்கீடு என்று மணித்தியாலங்களாக ஒருவர் மாறி ஒருவர் விளாசித் தள்ளினார்கள். யாரோடு யுத்தம் செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி வேறு.

சீனாவுக்கு நாட்டை விற்றுவிட்டீர்கள், சீனர்கள் தான் இங்கு வேலைவாய்ப்பை பெறுகிறார்கள், சீனாவின் சுரண்டல் பொருதாரத்திற்கும் கடன் கொள்கைக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற உறுமல்.

சமூக ஊடகங்களில் உடனுக்குடன் படம் காட்டல்.  இறுதியாக வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டபோது எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வெளியேற்றம். ஏமாற்று வித்தை. வெறும் வாய்ச்சவால்.

இது மழைக்காலம். மாரி மழைக்கு தவளைகள் கத்துக் கத்தென கத்திவிட்டு மெல்ல நழுவி விட்டன.

இதுவும் ஒரு தமிழ்த்தேசிய அரசியல்.

இது எப்படி இருக்கு?