கஜேந்திரகுமாரிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று! வெளியான முக்கிய தகவல்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று (18) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னிலையாகிறார்.
யாழ் மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணனினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.
வி.மணிவண்ணனை கட்சியிலிருந்தும், மாநகரசபை உறுப்புரிமையிலிருந்தும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நடவடிக்கையெடுத்தது. இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய மணிவண்ணன், கட்சியின் நடவடிக்கைக்கு இடைக்கால தடையுத்தரவு பெற்றார்.
இந்த நிலையில், யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அப்பிள் வியாபாரிகளின் இடப்பிரச்சனை ஆராய மாநகரசபையினால் நியமிக்கப்பட்ட குழுவில், தமிழ் காங்கிரசின் சார்பில் மணிவண்ணன் நியமிக்கப்பட்டார்.
இதனால் காங்கிரஸ் கடுப்பானது. மணிவண்ணன் நமது கட்சியை சேர்ந்தவர் அல்ல, அவரை எப்பொழுதோ நீக்கி விட்டோம் என்ற சாரப்பட கட்சியின் தலைமை, மாநகர நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இதனடிப்படையில், நீதிமன்றத்தை காங்கிரஸ் தலைவர்கள் அவமதித்தார்கள் என, மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஆனந்தராஜா, செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னபலம் ஆகியோரை கடந்த தவணையில் முன்னிலையாகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அவர்கள் முன்னிலையாகவில்லை. இன்று வழக்கு மீள எடுத்துக் கொள்ளப்படும்.