November 22, 2024

நீதிமன்றம் வந்த சீமான்; „மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள், கைகோர்த்து பயணிக்க நாங்கள் தயார்“

ஈரோட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதனையொட்டி, ஈரோடு முதலாவது குற்றவியல் மன்றத்தில் சீமான், கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோர் ஆஜராகி குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டனர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். யார் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அதுகுறித்து கவலை இல்லை என தெரிவித்த அவர், நாம் தமிழர் கட்சி மக்களுடன் கைகோர்த்து தான் போட்டியிடுகிறோம் என கூறினார். மக்களிடம் வேளாண் சட்டம் குறித்து தமிழக முதல்வர் விளக்கம் அளிக்கவோ அல்லது அறிக்கை வெளியிட வேண்டும் என கூறிய சீமான், அத்தியாவசிய பொருட்களை செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் இந்த சட்டத்தை தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறினார்.

திராவிட கட்சிகளுக்கு, ஆட்சிகளுக்கு மாற்றாக ஒரு திராவிட கட்சி தலைவரையே முன் மாதிரியாக கூறுவது ஏற்புடையது அல்ல என்று கூறிய சீமான், தாங்கள் காமராஜர், சிவானந்தம், சிங்காரவேலர் வழியில் நேர்மையான, தூய்மையான அரசியலை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், அவர்கள் எம்.ஜி.ஆரை முன்னிறுத்த நினைப்பதாகவும், ஆனால் தான் பிரபாகரனை முன்னிறுத்துவதாகவும் அவர் கூறினார்.