கானா அதிபர் தேர்தலில் அதிபர் நானா அகுபோ அடோ குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார்!
ஆப்பிரிக்க நாடான கானாவில் கடந்த திங்கட்கிழமையன்று அதிபர் தேர்தல் நடந்தது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் அதிபர் தேர்தல் நடந்ததால், அங்கு வழக்கமான அரசியல் பேரணிகள் இடம் பெறவில்லை. சமூக ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சிகள் வழியேதான் பிரசாரங்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் நானா அகுபோ அடோவுக்கும், முன்னாள் அதிபர் ஜான் மகாமாவுக்கும் இடையே நீயா, நானா என்கிற வகையில் மிக பலத்த போட்டி நிலவியது. இப்போது, பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் அதிபர் நானா அகுபோ அடோ குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார். அவருக்கு 51.6 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. ஜான் மகாமாவுக்கு 47.4 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. இரண்டாவது முறையாக கானாவில் நானா அகுபோ அடோ அதிபர் ஆவதை அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
அதே நேரத்தில் நானா அகுபோ அடோ, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பின்னடைவு ஆகிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.