சிறிலங்கா பொருட்களைப் புறக்கணிக்கக்கோரி பிரித்தானியாவில் போராட்டம்
அனுட்டிக்கப்படுகிறது. அதனையொட்டி பெருமளவிலான பிரித்தானியத் தமிழர்கள் சிறிலங்காவிலிருந்து அந்த அரசிற்கு அன்னியச் செலாவணி ஈட்ட இறக்குமதி செய்யும் பொருட்களை புறக்கணிக்கக்கோரி பிரபல வர்த்தக நிலையங்களின் வெளியே கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தினார்கள்.Marks & Spencer, NEXT, Tesco, ASDA, Sainsbury’s, Waitrose, Victoria’s Secret, H&M போன்ற நிறுவனங்கள் பாரிய அளவில் சிறிலங்காவில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை விற்பனை செய்கின்றன. அவற்றின் பல கிளைகளின் வெளியே சிறிலங்காவின் இனஅழிப்பு பற்றிய தகவல்கள் தாங்கிய சுலோக அட்டைகளுடன் நின்ற பிரித்தானியத் தமிழர்கள் அங்கு வந்த வாடிக்கையாளர்களிடம் அது பற்றி விளக்கி, முடிந்தவரையில் அப்பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். அது மட்டுமல்லாமல் சிறிலங்கா உற்பத்திகளுக்குப் பதில் வேறு எவற்றை வாங்கலாம் என்ற அறிவுரைகளையும் வழங்கினர்.
Wimbledon Marks & Spencer கிளைக்கு வெளியே கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மீரா என்றவர் „நத்தார் பண்டிகக்காலத்தில் பொருட்களை வாங்க வந்த பலர் எம்முடன் கதைத்தனர். எமது மக்களுக்கு ஏற்பட்ட அவலம் பற்றி அநேகர் அறிந்திருந்தாலும் அந்த அவலம் தொடர்வதற்கு தாம் வாங்கும் பொருட்களும் உதவுகின்றன என்பது பலருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. தயவு செய்து வேறு நாட்டு உற்பத்திகளை வாங்கி உதவுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டோம்“, என்று கூறினார்.
Manchesterல் உள்ள NEXT ஆடை நிறுவனத்தின் வெளியே போராடிய வசந்தன் என்பவரும் இந்நாட்டு மக்கள் அனைவரும் தமது அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை வரவேற்றதாகவும் சிறிலங்கா உற்பத்திகளை புறக்கணிப்பது பற்றி சிந்திப்பதாகக் கூறியதாகவும் சொன்னார்.