November 23, 2024

பாகிஸ்தான் மற்றும் சீனா திட்டமிட்டு மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது!

சர்வதேச அளவில் மத சுதந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து அறிய கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க அரசு சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் என்ற ஆணையத்தை நிறுவியது. இந்த ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் உலகில் எந்தெந்த நாடுகளில் மத சுதந்திரங்கள் மீறப்படுகின்றன என்பது குறித்த தனது பரிந்துரையை அறிக்கையாக வெளியிடும்.

திட்டமிட்டு மதசுதந்திர மீறல்களில் ஈடுபடும் நாடுகளை குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடுகள் என்றும் மத சுதந்திர மீறல்களை பொறுத்துக்கொள்ளும் நாடுகளை கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகள் என்றும் இந்த ஆணையம் பரிந்துரை செய்யும்.

இதன் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மத சுதந்திரங்களை மீறும் நாடுகளின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிடும். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் மத சுதந்திரங்களை மீறும் நாடுகள் குறித்த தனது பரிந்துரையை வெளியிட்டது.

இந்த நிலையில் மத சுதந்திரங்களை மீறும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இதில் பாகிஸ்தான் மற்றும் சீனா உள்பட 8 நாடுகள் குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடுகளாக, அதாவது திட்டமிட்டு மத சுதந்திர மீறல்களில் ஈடுபடும் நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மியான்மர், எரிட்ரியா, நைஜீரியா வடகொரியா, சவுதி அரேபியா பாகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தான் மற்றும் சீனாவும் மிக மோசமான மத சுதந்திர மீறல்களில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

அதேபோல், ரஷியா, கியூபா, நிகரகுவா மற்றும் கொமொரோஸ் ஆகிய நாடுகள் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.மத சுதந்திரம் என்பது அன்னியப்படுத்த முடியாத உரிமை. சுதந்திரமாக கட்டமைக்கப்பட்ட சமூகங்கள் செழித்து வளர் வதற்கான அடித்தளம் அது.

இன்று, அமெரிக்கா மத துன்புறுத்தல்களில் இருந்து தப்பி வந்தவர்களால் நிறுவப்பட்ட ஒரு நாடாக உள்ளது. மத சுதந்திரத்தை பெற விரும்புவோரை பாதுகாக்க அத்தியாவசியமான நடவடிக்கையை அமெரிக்கா இன்று மீண்டும் எடுத்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் இந்த நடவடிக்கையை சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் வரவேற்றுள்ளது.

அதேசமயம் திட்டமிட்டு மத சுதந்திர மீறல்களில் ஈடுபடும் நாடுகளாக இந்தியா, ரஷியா, சிரியா, வியட்நம் ஆகிய நாடுகளை இந்த ஆணையம் பரிந்துரை செய்திருந்ததும், ஆனால் அமெரிக்க வெளியுறவுத் துறை அதனை ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.