November 21, 2024

புலி நீக்க அரசியல் மட்டுமன்றி புலித்தோல் அரசியலும் தோற்றது!பனங்காட்டான்


துயிலும் இல்லம் துப்பரவு செய்தவர்கள் வீடுகளுக்குள் மாவீரர் தீபமேற்றி தேசியக் கடமையை முடித்துக் கொண்டார்கள். புலிநீக்க அரசியலில் தோல்வி கண்டவர் புலி ஆதரவு அரசியலுக்காக புலித்தோல் போர்க்கப் போய் வேடம் கலைந்து காட்சி தருகிறார். மாவீரர்களை சுயஅரசியலுக்கு ஆதாயமாக்க முனைபவர்களை இவ்வருட நினைவேந்தல் நன்றாக அடையாளம் காட்டியுள்ளது. 
இந்த வாரப் பத்தியை எழுதும்போது, கடந்த மாதம் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் விவகாரங்களை குறிப்பிடாது அல்லது பூசி மெழுகிச் செல்வது வரலாற்றுப் பதிவுக்கு தவறிழைப்பதாக அமையும்.

மாவீரர் நாளுக்கு முன்னதாக தாயகத்திலிருந்து வரும் தமிழ் ஊடகங்களில் வெளியான சில செய்திகளும் ஒளிப்படங்களும், அவைகளை அப்படியே பிரதி பண்ணிய பல சமூக ஊடகங்களின் பதிவுகளும் பெரும் நம்பிக்கையை அப்போது தந்தது. 

மாவீரர் துயிலும் இல்லங்களை போட்டி அடிப்படையில் துப்பரவு செய்த சில அரசியல்வாதிகளின் படங்களுடனான செய்திகள், மாறி மாறி வெளிவந்த ஊடக அறிக்கைகள் புதுப்புது கூட்டுகளாக இடம்பெற்ற சந்திப்புகள், மாவீரர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற முக்கியமான நினைவேந்தல் என்ற காட்சிகள் இவற்றுள் அடங்கும்.

சமகாலத்தில் நீதிமன்ற வழக்குகளும்கூட. நினைவேந்தலுக்கு அனுமதி கேட்கும் தமிழர் தரப்பின் மனுக்கள் ஒருபுறம். தடைபோடும் காவற்துறையினரின் (ஏவற்படை) மனுக்கள் மற்றொருபுறம்.