முல்லைதீவில் ஊடகவியலாளர்களை பாதுகாக்க தீர்மானம்?
ஊடகவியலார்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த யாருமே எண்ணாத வகையில் அமையவேண்டும் எனவும் முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் கண்டனம் தெரிவித்து பிரேரணை ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு குறித்த கண்டன அறிக்கையை நாட்டினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊடக அமைச்சர் பாதுகாப்புச் செயலாளர் பொலிஸ் மா அதிபர் மாவட்ட செயலாளர் உள்ளிடடவர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் மாவட்டத்தில் சட்டவிரோத மர கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அமர்வும் இன்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் ஆ. தவகுமாரன் தலைமையில் இடம்பெற்ற சபை அமர்வின் போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்களால் மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு இருந்தது
இதனடிப்படையில் சபையில் பிரேரணையை முன்வைத்து பேசிய புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
கடந்த 12ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அரச அதிகாரிகள் தங்களுடைய கடமைகளை சரிவர செய்யாத நிலையில் அந்த விடயங்களை வெளியில் கொண்டு வருவதற்காக அந்த ஊடகவியலாளர்கள் அங்கு சென்று இருந்தார்கள் இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வருகை தந்திருந்தார்கள்
உண்மையில் கடந்த காலங்களில் இந்த நாட்டிலே பல ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் கடத்தப்பட்டார்கள் அதையும் தாண்டி கொல்லப்பட்டிருக்கின்றார்கள் தற்போது இங்கே இருக்கின்ற நிலைமையில் அரச அதிகாரிகள் தங்களது கடமைகளை சரிவர செய்யாத நிலையில் அந்த விடயங்களை வெளிக்கொண்டுவர சென்ற ஊடகவியலாளர்கள் அங்கு தாக்கப்பட்ட நிலைமையில் அங்கு ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டு இருக்கின்றது ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் அல்லது அவர்கள் மீது ஒரு கொலை அச்சுறுத்தல் ஆகவே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது
இனி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீதான எந்த ஒரு தாக்குதலும் இடம்பெறக்கூடாது ஊடக சுதந்திரத்தின் மீது இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற மாஃபியாக்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் இவ்வாறான ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் என்பது இலங்கையில் எந்த பிரதேசத்திலும் இடம்பெறக்கூடாது ஒரு நாட்டிலே ஏர்முனை வளைந்தாலும் பேனாமுனை முடங்கினாலும் அந்த நாடு கெட்டு விடும் என்கிறார்கள் உண்மையில் இங்கு பேனா முனையை முடக்கப் பார்க்கிறார்கள் எனவே இவ்வாறான ஒரு செயற்பாடு எங்கள் மாவட்டத்திலும் எங்கள் நாட்டிலும் இடம்பெறாதவாறு இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதற்கு சில தினங்கள் முன்னர் வவுனியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்து சென்றிருந்தார் அவர் வந்து சென்று சில தினங்களுக்குள் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இருக்கின்றது எனவே எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறக் கூடாது எனவும் இடம்பெற்ற சம்பவத்திற்கான வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்
தொடர்ந்து கருத்து தெரிவித்த உறுப்பினர் வன்னியசிங்கம் அவர்கள் ஊடகங்கள் வாயிலாகவே எங்களுடைய பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரப்படுகின்றது எனவே ஊடகவியலாளர்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கான வன்மையான கண்டனத்தை வெளியிடுவதாக கருத்து தெரிவித்தார்
தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் உறுப்பினர் செல்லையா பிரேமகாந்த் அவர்கள் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது என்பது இந்த ஊடக அடக்குமுறையின் வடிவமாகவே இந்த நாட்டிலே நாங்கள் பார்க்க வேண்டும் போராட்டம் நடைபெற்ற காலத்திலேயே அரசினால் ஊடக படுகொலைகள் இங்கே இடம் பெற்றது இப்போது இயற்கை வளங்கள் தொடர்பாக இயற்கை வழங்களை அழித்து வருகின்ற நபர்களால் ஊடகங்கள் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவே இவ்வாறான இந்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து எங்களுடைய சபையிலே ஒரு பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் அத்தோடு இந்த வழக்கில் ஊடகவியலாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளுக்கு நாங்கள் எங்கள் ஆதரவுகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த உறுப்பினர் விஜயகுமார் அவர்கள் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது என்பது அல்லது பேனா முனை நசுக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் எனவே இந்த சபை இந்த விடயத்தை ஏகமனதாக தீர்மானிக்க வேண்டும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக எந்த இடத்திலும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்கு அவர்களுடைய பேனா முனைகளை பாவிப்பதற்கு எங்களுடைய மண்ணிலே இடம் அளிக்க வேண்டும் ஊடகவியலாளர்களை நசுக்குவதற்கு அல்லது அவர்களை இந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு மறைமுகமாக செயற்படுகின்ற அந்த நபர்கள் நிச்சயமாக அவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை எனவும் தெரிவித்தார்
தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதேச சபை உப தவிசாளர் ஜனமேஜயன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த அளவிலே சட்டவிரோதமான மரக் கடத்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கச் சென்ற வேளையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள் உண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவான இயற்கை வளங்கள் காணப்படுகின்றது இவை அளிக்கப்பட்டு வருகின்றது உண்மையில் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது
எங்களுடைய வளம் பல்வேறு மாஃபியாக்களால் இந்த வளங்கள் அழிக்கப்பட்டு ஏனைய மாவட்டங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதை நாங்கள் இரு கண்களால் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது அந்த வகையிலே இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நின்று குரல் கொடுத்த எங்களுடைய ஊடகவியலாளர்கள் ஆன தவசீலன் குமணன் ஆகியோர் எங்களுடைய முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமான இடம்பெற்றிருந்த செயற்பாட்டுக்கு அவர்கள் இந்த செய்தி சேகரிக்கச் சென்ற வேளையிலேயே அவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டிருக்கிறார்கள்
யுத்த காலத்திலேயே இவ்வாறு பல்வேறு குரலாக ஒலித்த பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அதன் பின்பு ஓரளவுக்கு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட்டதை அவதானித்து இருந்தாலும் தற்போது இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதை நாங்கள் கண்கூடாக காண்கின்றோம் எனவே இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இந்த ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அவர்கள் தங்களுடைய கருத்துக்களை தங்களுடைய ஒளிப்பதிவுகளை ஜனநாயக ரீதியில் அவர்கள் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இந்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனத்தையும் பதிவு செய்தார்
தொடர்ந்து கருத்து தெரிவித்த உறுப்பினர் ஜோன்சன் அவர்கள் இலங்கையிலேயே அனேகமான ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இவ்வாறான சம்பவங்கள் பல நமது நாட்டில் இடம்பெற்று இருக்கின்றது இவர்களுக்கான நீதிகள் இதுவரை வழங்கப்படவில்லை இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலே ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கின்ற தரப்பினர்களுக்கான தண்டனைகளும் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் அத்தோடு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஒரு நியதியை கொண்டுவருவதற்கு ஊடக அமைச்சர் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்
தொடர்ந்து கருத்து தெரிவித்த உறுப்பினர் குகனேசன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகளிலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் குரல் கொடுத்து வருகின்ற தமது சேவைகளை சிறப்பாக செய்து வருகின்ற இந்த இரண்டு ஊடகவியலாளர்களும் எங்களுடைய மாவட்டத்தினுடைய வளங்களை பாதுகாப்பதற்காக அரச அதிகாரிகள் செய்யவேண்டிய வேலையை அவர்கள் செய்யாத நிலையில் அதை சுட்டிக்காட்டி வளத்தை பாதுகாப்பதற்காக அந்த உத்தியோகத்தர்கள் கண்மூடித்தனமாக இருக்கின்ற நிலையில் இந்த ஊடகவியலாளர்கள் தமது பணியையும் தங்களுடைய இந்த மண்ணையும் வழங்களையும் காப்பதற்காக சென்ற வேளையில் இவ்வாறு தாக்கப்பட்ட சம்பவத்துக்கு வன்மையான கண்டனத்தை வெளியிட்டார்
அதேவேளை இந்த இயற்கை வளங்கள் ஓடு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் சாதாரண மக்கள் மீது தங்களுடைய பிரயத்தனங்களை பாவிக்கிறார்கள் தவிர இவ்வாறான பாரிய மாஃபியாக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்
தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் சிவந்தினி அவர்கள் மாவட்டத்தில் எத்தனை அநியாயங்கள் நடந்தாலும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலையிலேயே இருக்கின்றோம் ஏனெனில் ஊழல் நிறைந்த ஒரு அரசாங்கமே இருக்கின்றது நாங்கள் நேரடியாக கதைத்தாலும் அதை செய்ய முடியாத நிலையிலும் இவ்வாறான ஊடகவியலாளர்களே அந்த விடயங்களை வெளி யில் கொண்டுவந்து அந்த விடயங்களை தட்டிக் கேட்கிறார்கள் இவ்வாறு சுயாதீனமாக செயற்படுகின்ற இந்த ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்தார்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரேரணையை முன்வைத்து பேசிய பிரதேச சபை உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போது இந்த ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு ஊடகவியலார்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த யாருமே எண்ணாத வகையில் அமையவேண்டும் அவர்கள் சிந்திக்க வேண்டிய அளவிற்கு இந்த தண்டனை அமைய வேண்டும் என்பதோடு நாங்கள் சபையிலுள்ள மூன்று உறுப்பினர்கள் முன்னிலையிலேயே அண்மையில் ஒரு ஊடகவியலாளர் மீது மணல் மாபியாக்கள் தாக்க முற்பட்ட சம்பவத்தையும் நாங்கள் நேரில் கண்டு இருந்தோம் எனவே இந்த எமது மாவட்டத்திலும் இலங்கை நாட்டிலும் எந்த இடத்திலுமே இவ்வாறான இந்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் இடம்பெறக் கூடாது எனவும் அத்தோடு இந்த பிரேரணையை நாட்டினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊடக அமைச்சர் பாதுகாப்புச் செயலாளர் பொலிஸ் மா அதிபர் மாவட்ட செயலாளர் உள்ளிடடவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார் அத்தோடு குறித்த பிரேரணையை சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படும் என தவிசாளர் ஆ தவகுமாரன் தெரிவித்தார்