November 21, 2024

யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒரு பைப்பர் படகில் தமிழகத்தின் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் நேற்றிரவு வந்திறங்கியதாக தமிழக காவல்துறை இன்று காலை அறிவித்துள்ளது.

திருகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (45) அவரது மனைவி சல்மா பேகம்(35) இவர்களது மகன் அன்சார் (10) ஆகிய மூன்று பேரும் கோடியக்கரை சவுக்கு காட்டில் வந்து இறக்கினர்.

இந்த மூன்று பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் நிதி நிறுவனம் ஒன்று நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் விலை மோசடி செய்து தலைமறைவான நிலையில் பல்வேறு பிரதேசங்களில் நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்களாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த குறித்த நிதி நிறுவனம் கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கியதுடன் கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும் நாடு முழுவதிலும் 1200 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.