பிரான்ஸ் நாட்டில் மீண்டும் மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது!
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 3 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவந்தது. இதையடுத்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த மருத்துவ அவசரநிலை கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த ஜூலை விலக்கிக்கொள்ளப்பட்டது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தையடுத்து பிரான்சில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 591 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் நேற்று ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்சில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 37 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து பிரான்ஸ் நாட்டில் இன்று முதல் மீண்டும் மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த அவசரநிலை
குறைந்தது 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரநிலை பிரகடனத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத்தொடங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.