November 22, 2024

கலைஞர்களுக்கான உதவுதொகை வழங்கும் வைபவம்

கௌரவ வடமாகாண ஆளுநர் p.s.m சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று காலை 1௦ மணியளவில் யாழ்ப்பாண பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒழுங்கமைத்த, கலை இலக்கியத்துறைக்கு பங்களிப்பு செய்து தற்போது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கான உதவுதொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் சண்முகதாஸ் மற்றும் அவரின் மனைவியார், கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண ஆளுநரின் செயலாளர், மற்றும் கலைத்துறை கலைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், “உங்களை பார்க்கும் பொழுதுதான் கலைத்தாயும் லட்சுமித்தாயும் ஒன்றாக இருப்பதில்லை என்ற கருத்து மீண்டும் நினைவுக்கு வருகின்றது. என்றாலும் கலைஞர்கள் களைத்துப்போகவில்லை. தங்களின் கலைப்பணியை ஆற்றிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அந்தக் கலைஞர்களோடு வடமாகாணம் என்றும் இணைந்திருக்குமென உறுதிபட கூறிக்கொள்கிறேன்.

இலங்கையிலேயே வடமாகாணம் தான் கலைகளின் பிறப்பிடமாக காணப்பட்டது. இதனைப்பார்த்து தற்பெருமை கொண்ட நாம் இன்று திகைத்துப்போய் நிற்கின்றோம். எமது இளைய சமுதாயம் அழிவுப்பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. எமது கலைகளெல்லாம் அழிந்து போய்விடுமோ என்று பயந்த சந்தர்ப்பத்தில் தான் கலைப் பொக்கிசங்களாக இருக்கின்ற உங்களை சோர்ந்துபோக விடக்கூடாது என்பதற்காக இன்றைய பாரிய பணியை முன்னெடுத்துள்ளோம்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், நீங்கள் இந்தப்பணியை செய்வது மட்டுமல்லாது இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் மாற்றிச்செல்ல வேண்டும். அழிந்துபோகின்ற கலைகளை மீண்டும் புத்துயுரூட்டி இளைய சமூகத்திடம் கொடுத்துச்செல்லவேண்டும். நீங்கள்தான் சமூகத்தோடு வாழ்கிறீர்கள், கலைகளும் உங்களோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றது. இந்த கலைகளை தொடர்ந்து வாழவைக்கவேண்டியது உங்களுடைய தலையாய கடமை என்றும் வேண்டிக்கொண்டார்.