மாற்றுத்திறனாளி பெண் திருமணம் – சீர்வரிசை அளித்த கால்பந்தாட்ட குழு!
சென்னை அடுத்த, குன்றத்தூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்திற்கு கால்பந்தாட்ட குழு ஒன்று சீர்வரிசை பொருட்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
குன்றத்தூர் அடுத்த கெலடிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மகேஷ்வரி. சிறு வயதிலேயே ர்கண் பார்வை இழந்த அவர், வயதான தனது தாயுடன் வசித்து வருகிறார்.
அப்பகுதியில் செயல்பட்டு வரும் கால்பந்தாட்ட குழுவினருக்கு , அவ்வப்போது சிறு, சிறு உதவிகளை மகேஷ்வரி செய்து வந்துள்ளனர். அவருக்கு திருமணம் ஏற்பாடான நிலையில், கால்பந்தாட்ட குழுவினர் சீர் வரிசை வழங்க முடிவு செய்தனர். அதன்படி கால்பந்தாட்ட குழு தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில், சுமார் ரூ.2 லட்சம் மதிப்பீல் கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் ஒரு மாதத்திற்கு வேண்டிய மளிகை சாமான்கள் உள்ளிட்ட அனைத்தையும் மணமகளிடம் வழங்கியுள்ளனர்.
சீர்வரிசை பொருட்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, தாம்பூல தட்டுகளை ஏந்தி அப்பகுதி பெண்கள் ஊர்வலமாக பெண்ணின் வீட்டிற்கு வந்து பொருட்களை அளித்துள்ளனர்.
இதனால் மகேஷ்வரி இன்ப அதிர்ச்சி அடைந்தார். சீர்வரிசை பொருட்களை தனது கண்களால் பார்க்க முடியவில்லை என்றாலும் தனது மனக்கண்களால் பார்த்து சந்தோஷம் அடைந்ததாக மகேஷ்வரி தெரிவித்தார்.