சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவெடுக்க செயற்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்!
பரபரப்பான சூழலுக்கிடையே இன்று காலை அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் ஆரம்பித்தவுடன் நீட் தேர்வு, இருமொழி கொள்கை, ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், தேர்தல் கூட்டணி கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் படி, பல விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக காரசாரமான விவாதங்கள் எழுந்தன. கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே ஓபிஎஸ் தரப்பினர், முகமூடி அணிந்து வந்தும் கோஷங்களை எழுப்பியும் ஓபிஎஸ்க்கு ஆதரவு அளித்த அதே வேளையில், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் நிரந்தர முதல்வர் என பலத்த கோஷங்களை எழுப்பி ஈபிஎஸ்க்கு ஆதரவு அளித்தனர். இவ்வாறாக அதிமுகவினர் இருபிரிவினராக இருப்பதால் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில், 3 மணிநேரத்திற்கு மேலாக நீடிக்கும் செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக இன்றே முடிவெடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக இன்றைக்குள் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் பதவிக்கு பெரும்பாலும் ஈபிஎஸ் தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.