200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்!
திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகத்தின் முன்பு சமூக செயற்பாட்டாளர் சபரிமாலா தலைமையில், டெட் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சபரிமாலா, ‘’கடந்த 2013-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி 80 ஆயிரம் பேர் வேலை கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கின்றனர், தமிழக அரசு ஜனநாயகமின்றி மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவித்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு ஐந்தாண்டுகள் மட்டுமே மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அறிவிக்க முடியுமா? ஆனால் இதுவரையிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
ஏழு வருடங்களாக காத்திருந்த நிலையில், இனியும் காத்திருக்கப் போவதில்லை. தமிழக அரசு மற்றும் கல்வித் துறைக்கு ஏழு நாட்கள் அவகாசம் விடுக்கின்றோம், நியாயமான தீர்ப்பை 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும் இல்லை என்றால், எட்டாம் நாள் ஆசிரியர் சபரிமாலா தொடர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம்’’என்று எச்சரிக்கை விடுத்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.