வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கக்கூடிய அபியாஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது!
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஏவுகணைகளை தயார் செய்து அவற்றை வெற்றிகரமாக சோதித்து வருகிறது.
அந்த வகையில் வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கக்கூடிய அபியாஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. ஏவு வாகனத்தில் இருந்து சீறிப்பாய்ந்த அபியாஸ் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்காக மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அபியாஸ் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையின் மூலம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பல்வேறு ஏவுகணை அமைப்புகளை மதிப்பீடு செய்வதற்கான இலக்காக இது பயன்படுத்தப்படலாம். இந்த சாதனைக்கு ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கும் பிற பங்குதாரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.