November 22, 2024

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் வருகிற 26-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி காணொலியில் தொடர்பு கொண்டு பேச முடிவு!

கொரோனா காரணமாக பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் தடைப்பட்டுள்ளது. இதனால் அவர் காணொலி காட்சி மூலம் முக்கிய தலைவர்களுடன் பேசி வருகிறார்.

சமீபத்தில் அவர் ஆஸ்திரேலியா, ஜப்பான் நாட்டு தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசினார்.

வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் காணொலியில் தொடர்பு கொண்டு பேச பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அண்டைநாடுகளுடன் சுமூக உறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக இந்த கலந்துரையாடல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை சுற்றி அமைந்துள்ள அண்டைநாடுகளில் மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் இந்தியா சுமூக உறவுடன் உள்ளது. நேபாளமும், இலங்கையும் சீனாவுக்கு ஆதரவாக மாறி இருக்கின்றன.

இதையடுத்து சீனா பக்கம் இந்த நாடுகள் முழுமையாக சாய்வதை தடுக்க பிரதமர் மோடி அந்த நாடுகளுடன் பேச ஆரம்பித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக வருகிற 26-ந்தேதி ராஜபக்சேவுடன் பேச்சு நடத்தப்படுகிறது.

ஆனால் நேபாளத்துடன் மட்டும் இன்னும் முழுமையான உறவு சீரடையவில்லை. சமீபத்தில் பிரதமர் மோடி பிறந்த தினத்தன்று நேபாள பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து 2 ரெயில்களை நேபாளத்துக்கு இந்தியா பரிசாக வழங்கியது. இதன் மூலம் நேபாளத்தையும் மீண்டும் நட்பு நாடாக மாற்ற இந்தியா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது