November 22, 2024

தமிழர்களின் இரட்டைக்குடியுரிமை..!!கோட்டாபய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த ஞானசாரர்!

தமிழர்களின் இரட்டைக்குடியுரிமை..!!கோட்டாபய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த ஞானசாரர்!

புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை, பிரிவினைவாத கொள்கையை செயற்படுத்த பயன்படுத்திக் கொள்வார்கள். ஆகவே இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலைப்புலிகள் அமைப்பு நாட்டில் இல்லாதொழிக்கப்பட்டாலும் அவர்களின் பிரிவினைவாத கொள்கை உலகம் முழுவதும் வியாபித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சீனர்களும் இந்தியர்களும் எதிர்காலத்தில் இலங்கை நாடாளுமன்றில் உறுப்பினராக செயற்படுவார்கள் என்பதில் எவ்வித ஆச்சரியமும் கிடையாது. ஆகவே அரசாங்கம் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும் இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை காலமும் 20 சீர் திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. பிரதான இரு கட்சிகளும் ஆட்சியமைக்கும் போது தங்களுக்கு தேவையான விதத்தில் அரசியலமைப்பினை திருத்தம் செய்து கொள்கிறார்கள். இதனால் அரசாங்கத்துக்கு நன்மை ஏற்பட்டுள்ளதே தவிர நாட்டுக்கு எவ்வித அபிவிருத்திகளும், மாற்றங்களும் ஏற்படவில்லை.

அரசியலமைப்பின் 17வது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய அரசியல்வாதிகள் 18வது திருத்தத்திற்கும், 19வது திருத்தத்திற்கும் ஆதரவு வழங்கினார்கள். அரசியலமைப்பின் 19வது திருத்தம் கடந்த காலங்களில் அரச மற்றும் சமூக மட்டத்தில் பிரதான பேசுபொருளாக காணப்பட்டது. 19வது திருத்தத்தை ஆதரித்த அரசியல்வாதிகள் அரசியல் தேவைகளுக்காக அதனை எதிர்க்கவும் ஆரம்பித்தார்கள். அது அரசியல்வாதிகளுக்கே உரித்தான தனித்துவ இயல்பு.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்து புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.

தற்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திருத்தத்தில் இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் நாட்டில் இல்லாதொழிக்கப்பட்டாலும் அவர்களின் பிரிவினைவாத கொள்கை உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் பங்குபற்ற முடியும் என்பதை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நிச்சயம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.