இரு மொழிக் கொள்கை மட்டுமே இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன்!
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள தந்தை பெரியார், அண்ணா நினைவகத்தில்.கலெக்டர் கதிரவன் தலைமையில் அமைச்சர் செங்கோட்டையன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘’பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு செயல்களை அரசு செய்துள்ளது. திராவிட இயக்கத்தின் வரலாற்றில் அனைவரும் சமநிலை அடைய வேண்டும் என்பதற்காக அரும்பணி ஆற்றியவர் தந்தை பெரியார்.
ஒரு நாடு எப்படி சீர்திருத்தத்தை உருவாக்குகிறது என்பதற்கு தந்தை பெரியார் எடுத்துக்காட்டாக விளங்கியவர். தந்தை பெரியாரின் வழியில் திராவிட இயக்கம் 1967 க்குப் பிறகு தமிழ்நாட்டில் வேரூன்றி இன்றும் திராவிட இயக்கம் நிலைத்து நிற்கிறது என்பதற்கு தந்தை பெரியாரின் வழிகாட்டுதல் தான் காரணம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 21ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் நலன் கருதி மன அழுத்தத்தை குறைக்க ஆன்லைன் வகுப்பு கூடாது என்ற நிலையை அரசு மேற்கொண்டுள்ளது.
அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் முதல்வர் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே இருக்கும். இதற்காக அரசு பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாடுபடுவார். இருமொழிக் கொள்கை என்று என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறியிருக்கிறார்.
பள்ளி கட்டணம் முழுமையாக வசூலிப்பதாக 14 பள்ளிகள் மீது புகார்கள் வந்ததன் பேரில் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கும் திட்டம் அரசுக்கு இல்லை. பொருளாதார நெருக்கடியில் அதுபோன்ற நிலைகளில் அரசால் அறிவிக்க இயலாது. மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையின் படி இருபத்தி ஒன்றாம் தேதி முதல் அனைத்து மாநிலங்களில் பள்ளியை திறக்கலாம் என தெரிவித்திருக்கிறார்கள். பள்ளியை திறப்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் மனநிலை கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்வோம். இரண்டாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன’’என்றார்.